/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
காரை ஏற்றி கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது
/
காரை ஏற்றி கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது
ADDED : மே 21, 2025 02:25 AM

தென்காசி:தென்காசி, பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்துரை, 43; பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனை கண்டக்டர்.
வேல்துரை, மனைவி உமா மற்றும் இரண்டு குழந்தைகளுடன், அடைக்கலபட்டணத்தில் சுதாகர், 41, என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்தனர். தினமும், தன் டூ - வீலரை பாவூர்சத்திரத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ்சில் பணிக்கு செல்வார்.
நேற்று முன்தினம் அதிகாலை பணிக்கு செல்ல, பாவூர்சத்திரம் நோக்கி டூ - வீலரில் தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றார்.
அப்போது, ஒரு கார் வேகமாக அவர் மீது மோதி, நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட்ட வேல்துரை, தலையில் காயமடைந்து அங்கேயே இறந்தார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பூலாங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம், 36, என்பவரை 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அப்போது தான், நடந்தது விபத்து அல்ல; திட்டமிட்டு நடந்த கொலை என, தெரியவந்தது.
டூ - வீலரில் ரோட்டின் ஓரமாக சென்ற வேல்துரை மீது, வேண்டுமென்றே காரை மோதி, விபத்து போல ஆறுமுகம் கொலை செய்துள்ளார். வேல்துரை மனைவி உமாவுக்கும், சுதாகருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. வேல்துரை பணிக்கு சென்ற பின், சுதாகர், உமாவுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
தங்கள் உறவுக்கு தடையாக இருந்ததால், வேல்துரையை கொல்ல திட்டமிட்டு, வாடகை கார் டிரைவர் ஆறுமுகத்தை இருவரும் பயன்படுத்தியுள்ளனர். உமா, சுதாகர், ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர்.