/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மகனை வெட்ட முயன்ற போது குறுக்கே வந்த தந்தை கொலை
/
மகனை வெட்ட முயன்ற போது குறுக்கே வந்த தந்தை கொலை
ADDED : டிச 12, 2025 04:27 AM

தஞ்சாவூர்: மகனை வெட்ட முயன்ற போது, குறுக்கே வந்த தந்தை வெட்டி கொல்லப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அல்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 60. இவரது மகன் விவேக், 24; விவசாய கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்த அருண், 28, அவரது மனைவி கவுசல்யா, 24.
விவேக், கவுசல்யாவுக்கு, சில மாதங்களாக முறைகேடான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அருண் வெளிநாட்டில் இருந்து, மூன்று மாதங்களுக்கு முன், ஊர் திரும்பிய நிலையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அவருக்கு தெரிந்தது.
இது தொடர்பாக, விவேக்கை, அருண் எச்சரித்தார். இதனால், விவேக், அருண் இடையே தகராறு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அருண் தன் உறவினர்களான, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 30, முத்தமிழ்செல்வன், 32, பாலசுப்பிரமணியன், 30, ஆகியோருடன் விவேக் வீட்டுக்கு சென்று, தகராறு செய்தார்.
அப்போது, வீட்டில் இருந்து மூர்த்தி, அவரது மகன் விவேக் வெளியே வந்த போது, நான்கு பேரும் அரிவாளால் விவேக்கை வெட்ட முயன்றனர். அதை தடுக்க குறுக்கே வந்த மூர்த்தியின் கழுத்து மற்றும் தலை பகுதியில் வெட்டு விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், மூர்த்தி உடலை கைப்பற்றி, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, கொலை தொடர்பாக தமிழரசன், முத்தமிழ்செல்வன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவான அருணை தேடி வருகின்றனர்.

