/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
50 சண்டை கோழிகளை கடித்து கொன்ற தெருநாய்கள்
/
50 சண்டை கோழிகளை கடித்து கொன்ற தெருநாய்கள்
ADDED : நவ 07, 2025 11:53 PM

கும்பகோணம்: கும்பகோணம் அருகே, 50 வளர்ப்பு சண்டைக்கோழிகள், தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பழவத்தான்கட்டளை, விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 37; சண்டைக்கோழிகள், ஆடு, மாடுகளை வளர்ப்பவர். நேற்று அதிகாலை, இவரது, 50 வளர்ப்பு சண்டைக்கோழிகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்த கார்த்திக் அதிர்ச்சியடைந்தார்.
இறந்த கோழிகளை, நேற்று காலை கும்பகோணம் யூனியன் அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்து, தெருநாய்களை பிடிக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்தும், உயிரிழந்த கோழிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் தர்ணா செய்தார்.
நாச்சியார்கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, கார்த்திக்கிடம் பேச்சு நடத்தினர். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உயிரிழந்த 50 கோழிகளுக்கும், உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்வதாகவும், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

