/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போர்க்கால அடிப்படையில் குப்பை அகற்ற நிபுணர் குழு: கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வன விலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க நடவடிக்கை
/
போர்க்கால அடிப்படையில் குப்பை அகற்ற நிபுணர் குழு: கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வன விலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க நடவடிக்கை
போர்க்கால அடிப்படையில் குப்பை அகற்ற நிபுணர் குழு: கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வன விலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க நடவடிக்கை
போர்க்கால அடிப்படையில் குப்பை அகற்ற நிபுணர் குழு: கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வன விலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க நடவடிக்கை
ADDED : மே 01, 2024 08:05 AM
மூணாறு : மூணாறு பகுதியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையில் குப்பைகளை போர் கால அடிப்படையில் அறிவியல் ரீதியில் அகற்ற வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகள் நடமாடுகின்றன. அவற்றால் உயிர் பலி ஏற்பட்டன. அதனால் மனித, வனவிலங்கு மோதல் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது. அக்குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள மூணாறு பகுதியில் குப்பையை போர் கால அடிப்படையில் அறிவியல் ரீதியாக அகற்ற வேண்டும். அது போன்று அகற்றவில்லை என்றால் படையப்பா காட்டு யானையை வேறு பகுதிக்கு கொண்டு சென்றாலும் வேறு யானை கூட்டங்கள் வந்து செல்லும். சுற்றுலாவுக்கு தேசிய நெடுஞ்சாலையை தவிர உள் ரோடுகளில் இரவு பயணத்தை தடை செய்ய வேண்டும்.
இரவு 7:00 மணிக்கு முன்பு சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு வர வேண்டும். அதனை சுற்றுலா துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளை சுற்றி சூரிய மின்வேலி அமைக்கவும், ரேஷன் பொருட்கள் பகலில் வினியோகித்து மாலையில் கடைகளை மூட வேண்டும்.
உணவு பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பலத்த சுவர் கொண்ட அறைகளில் பாதுகாக்க வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.
காட்டு யானைகள் அதிகம் செல்லும் மாட்டுபட்டி, ராஜமலை, கல்லார் ஆகிய பகுதிகளில் குப்பை அதிகம் குவிகின்றன.
தவிர பூப்பாறை உள்பட பல பகுதிகளில் குப்பை கொட்டுவதால் யானைகள் வந்து செல்வதும், ஒரு முறை குப்பைகளை யானைகள் ருசித்தால் மீண்டும் வருவதும் வழக்கமாகி விட்டது.
மூணாறு பகுதியில் ஓட்டல், ரிசார்ட், ஹோம் ஸ்டே ஆகியவற்றின் குப்பைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும். ராஜமலை, மாட்டுபட்டி, எக்கோ பாய்ண்ட் ஆகிய பகுதிகளில் குப்பைகளை போர் கால அடிப்படையில் அகற்றுவதற்கு மூணாறு, தேவிகுளம், சாந்தாம்பாறை, சின்னக்கானல் ஆகிய ஊராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆறுமாதங்களுக்குள் ஊராட்சிகள் குப்பைகளை அகற்ற தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மூணாறு ஊராட்சி குப்பைகளை சேமிக்கும் கல்லார் பகுதியில் குப்பை கிடங்கை சுற்றி சூரிய மின் வேலி உள்பட இரும்பு கம்பிகளை கொண்டு சுற்று வேலி இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும். ஆனயிரங்கல், தேவிகுளம் இடையே யானைகள் செல்லும் வழித்தடம் சீரமைக்க வேண்டும் உள்பட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.