/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 02, 2024 05:54 AM

தேனி: மாவட்டத்தில் கோயிலில்களில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று குரு தரிசனம் பெற்றுச் சென்றனர்.
தேனி : வேதபுரீ ஆசிரமத்தில் உள்ள ஆதிகுரு தட்ஷிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ஏப்.,30 மாலை கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் நடந்தது. நேற்று காலை லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த குருபகவான் தரிசனம் பெற்று பக்தர்கள் சென்றனர். சிறப்பு ஹோமம் நடந்தது. குருபெயர்ச்சி வழிபாட்டில் தேனி நகர்பகுதி, வீரபாண்டி, முல்லை நகர், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் கோயிலில் யாகசாலை பூஜைகளுடன் குருபகவான், தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத்தில் உள்ள பிரகஸ்பதி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஜம்புலிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில் யாகம் வளர்த்து குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று குரு தரிசனம் பெற்றுச் சென்றனர்.
பெரியகுளம்: பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று (மே 1) மாலை 5:21 மணிக்கு ரிஷப ராசிக்கு குருப் பெயர்ச்சியானார். அர்ச்சகர் ஸ்ரீராம் யாகசாலை பூஜை செய்தார். நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
குருப் பெயர்ச்சியினால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகர ராசியினர் நன்மையடைவர். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் பெற்று சென்றனர்.
போடி: சுப்ரமணியர் சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி விழா பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு யாகமும், மாலையில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள், பரிகார பூஜையும் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானின் தரிசனம் பெற்றனர்.போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், பரிகார பூஜைகளும் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.
உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 21 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக நவகிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் உபயதாரர்களாக இருந்து நடத்தினர். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
கம்பம்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில்களிலும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று குரு அருள் பெற்றுச் சென்றனர்.
கூடலுார்: கூடலுாரில் மாதா அமிர்தானந்தமயி சேவா சமதி சார்பில் குரு பெயர்ச்சி ஹோமம் நடந்தது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசிகளை சேர்ந்தவர்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர்.
சத்சங்கம், மானச பூஜை, குரு அஷ்டோத்ர அர்ச்சனை, பஜனை நடந்தது. ஹோம திரவியம் சமர்க்கப்பட்டது. -கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, குரு தரிசனம் பெற்றுச் சென்றனர்.

