ADDED : மே 19, 2024 05:27 AM
பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருகி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மே 1 முதல் மே 9 வரை வெயில் தாக்கத்தால் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், மே 10ல் கோடை மழையால் அருவிக்கு தண்ணீர் வந்தது.
மே., 12 ல் இரவு தொடர்ந்து மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மே.13,மே 14 சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மே 15ல் நீர்வரத்து சீரான நிலையில் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 4:00 வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மாலை 5:00 மணிக்கு சாரல் மழையை தொடர்ந்து கனமழையும், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் இன்று (மே 19) கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் குற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கினால் சிறுவன் இழுத்து செல்லப்பட்ட சம்பவகங்களை முன் உதாரணமாகக் கொண்டு, தேவதானப்பட்டி ரேஞ்சர் டேவிட் ராஜா (மே 19) இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து நுழைவு கேட்டினை பூட்டினார்.-

