/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 07, 2024 11:56 PM

தேனி மாவட்டத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளியாகும். 1100 மாணவர்கள் படிக்கின்றனர். 2 ஏக்கர் 65 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்தில் 1 ஏக்கர் 40 சென்டில் நிழல் தரும் தென்னை, நெட்லிங்கம், வாகை, புங்கை, இலவம் உட்பட 20 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து, வளாகமே பசுமையாக காட்சி அளிக்கிறது. பள்ளியின் அருகே வராகநதி செல்வதால் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மண்ணில் நடப்படும் எவ்வித மரக்கன்றுகளும் நூறு சதவீதம் வளர்ந்து விடுகின்றன. தலைமை ஆசிரியர் கோபிநாத், ஓய்வு பெற்ற விவசாயப் பிரிவு ஆசிரியர் பாண்டியராஜன் முயற்சியில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, தலைவர்கள் பிறந்தநாள் விழாக்களில் பள்ளி வளாகத்திலும், பள்ளியின் வெளிபுறத்திலும் நட்ட மரக்கன்றுகள் நிழல் தரும் மரங்களாக வளர்ந்துள்ளன. மரங்கள் தரும் நிழலால் பள்ளி வகுப்பறை நேரங்கள் கோடை காலங்களிலும் குளிர்ச்சியாக உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
காய்கறித்தோட்டம்
தேசிய மாணவர் படை ஆசிரியர் அப்துல் ரஹீம் மேற்பார்வையில் மாணவர்கள் கூட்டு முயற்சியால் காய்கறி தோட்டம் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பருவ காலங்களில் இங்கு விளையும் அவரை, பீர்க்கை, புடலை, சுரைக்காய், தக்காளி, கத்தரி, மிளகாய் உட்பட 15 வகையான காய்கறி வகைகள் இங்கு உள்ள சத்துணவு மையத்திற்கு அவ்வப்போது கொடுக்கப்படுகிறது. அவற்றை உணவுடன் மாணவர்கள் ருசித்து சாப்பிடுகின்றனர். மூலிகை தோட்டத்தில் துளசி, துாதுவளை, பச்சிலை, கீழாநெல்லி, சிறியாநங்கை, நாயுருவி, கூரைப்பூ, தும்பை, கற்றாழை உட்பட அரிய வகை மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளும் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.
வகுப்பறைக்கு இரு மரக்கன்றுகள்
எஸ்.ஜே.கோபிநாத், தலைமை ஆசிரியர்: மாணவர்களுக்கு படிப்புடன் விவசாயம் சார்ந்த அறிவு குறிப்பாக இயற்கையை நேசிப்பதை ஊக்குவிக்கிறோம். சுற்றுசூழல், வனவளம் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அவர்களை கொன்றை, மலைவேம்பு, புளி, பெருங்கொன்றை உட்பட 10 வகையான மரக்கன்று ரகங்களை ஆயிரக்கணக்கில் விதை பந்துகளாக தயாரித்து சோத்துப்பாறை, கும்பக்கரை பகுதியில் தூவி விட்டுள்ளோம். அதில் முளைத்துள்ள விதைகள் கண்காணிக்கப்படுகின்றன. வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்ப்போம் என்ற வார்த்தையை தழுவி வகுப்பறைக்கு இரு மரம் வளர்ப்போம் என்று மரக்கன்றுகளை நட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்துள்ளோம்., என்றார்.
துாய்மைப் பணிகள்
ஆர். அப்துல் ரஹீம், தேசிய மாணவர் படை ஆசிரியர்: மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் இயற்கை அறிவை நேசிக்கும் விதமாக பிளாஸ்டிக், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் உட்பட சமூக நோக்கத்துடன் ஊர்வலங்கள் நடத்துகிறோம். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். துாய்மை பாரத திட்டத்தில் அவ்வப்போது களப்பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. தேசிய மாணவர் படையில் உள்ள 100 மாணவர்கள் மரங்கன்றுகளை நட்டு பாதுகாப்பதுடன், அவர்களுக்கு காய்கறி கழிவுகளையும், முட்டை தோல்களையும் மிகச் சிறிய தூளாக மக்கச் செய்வதுடன், மண்புழு உரம், மாட்டு எரு, ஆட்டு எரு உள்ளிட்டவைகள் எவ்வாறு இயற்கை உரங்களாக பயன்படுகிறது என மாணவர்களுக்கு களப்பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை காய்கறி தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். 'பசுமை காப்போம்' என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்கள் கைகளால் மரக்கன்றுகளை நடவுசெய்ய வலியுறுத்தி கவுரவப் படுத்துகிறோம்., என்றார். --