/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காததால் தவிப்பு
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காததால் தவிப்பு
ஊரக வேலை உறுதி திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காததால் தவிப்பு
ஊரக வேலை உறுதி திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காததால் தவிப்பு
ADDED : ஏப் 27, 2024 05:03 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் முடித்த ஒப்பந்ததாரர்கள் பல மாதமாகியும் பணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பேவர் பிளாக் பதித்தல், சிறு பாலம், கழிவுநீர் வடிகால், சிமென்ட் ரோடு, சத்துணவு கூடம், வகுப்பறை கட்டுமானம் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர் மூலம் சிமென்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் சம்பளம் கணக்கிட்டு அவ்வப்போது வழங்குகின்றனர்.
பணிகளில் தளவாட பொருட்கள் வினியோகத்திற்கான செலவு தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதமாக வழங்கப்படவில்லை.
இதனால் பணிகள் முடித்த ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றியத்திற்கு அன்றாடம் 'விசிட்' செய்து அரசு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்திற்காக காத்துக் கிடக்கின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகள் முடிந்து பல மாதம் ஆகிறது. ஒப்பந்ததாரர் ஒவ்வொருவருக்கும் ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிலுவை உள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின் பணம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அடுத்தடுத்த வேலைகளும் பாதிப்படைகிறது. நிலுவையில் உள்ள பணம் விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

