/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற சிலமலை விவசாயிகள் வலியுறுத்தல்
/
கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற சிலமலை விவசாயிகள் வலியுறுத்தல்
கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற சிலமலை விவசாயிகள் வலியுறுத்தல்
கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற சிலமலை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 01:59 AM

போடி: போடி, சிலமலையில் உள்ள வடத்தான்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே சிலமலை தெற்கு பகுதியில் 25 ஏக்கரில் அமைந்துள்ளது வடத்தான்குளம் கண்மாய். மழை காலங்களில் பெய்யும் மழை நீர் பொட்டிப்புரம் காமராஜ் தயாள சமுத்திர குளத்திலிருந்து வரும் உபரி நீர் ராசிங்காபுரம், மல்லிங்காபுரம் கால்வாய் வழியாக வடத்தான்குளம் கண்மாய்க்கு வந்து சேரும். இக் கண்மாயில் நீர் நிரம்புவதன் மூலம் 300 ஏக்கர் நேரடியாகவும், 100 ஏக்கர் மறைமுகமாக பாசன வசதி பெறும். இதனால் சிலமலை, மணியம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செழிப்பாகும்.
இந்நிலையில் வடத்தான் குளத்திற்கு நீர் வரத்து ஓடையை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் ஓடை இருக்கும் இடம் தெரியாமல் மாறி உள்ளது. மேலும் முட்புதர் ஆக்கிரமிப்பில் கண்மாய் சிக்கியுள்ளதால் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விளைநிலங்களில் தண்ணீரை தேக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகள் கருத்து:
18 ம் கால்வாய் திட்டத்தில் விடுபட்டதால் பாதிப்பு :
சுந்தரம், தி கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளர், சிலமலை : பொட்டிப்புரம் காமராஜ் தயாள சமுத்திர குளத்தில் இருந்து சிலமலை வடத்தான் குளம் கண்மாய் வரை நீர்வரத்து பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பெரிய அளவில் மழை பெய்தாலும் கண்மாயில் மழை நீரை தேக்கவும், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 18 ம் கால்வாய் திட்டத்தில் வடத்தான்குளம் விடுபட்டு போனதால் 18ம் கால்வாய் நீர் வரத்து இல்லாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த நிதியிலும், சில விவசாயிகள் தங்களது நிலங்களை தந்ததால் மண் அள்ளும் இயந்திரம் மூலம் சப்பானி குளத்தில் இருந்து வரும் உபரி நீரை வடத்தான்குளம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 18 ம் கால்வாய் திட்டத்தில் கண்மாய்க்கு நீர் வரவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
மகாராஜன், விவசாயி, மல்லிங்காபுரம் : இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் 300 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழை நீர் கண்மாய்க்கு வருவதில்லை. கண்வாய் தூர்வாரப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலானதால் முட்புதர்களாக வளர்ந்து உள்ளது.
மழைக் காலங்களில் வரும் நீரை கூட கண்மாயில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்துள்ள முட்புதர்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் நீர் வரும் பாதை, கண்மாயில் வளர்ந்து உள்ள முட்புதர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கரையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.