/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்; திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
/
உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்; திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்; திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்; திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
ADDED : ஆக 11, 2024 05:01 AM
கம்பம், : திராட்சை, வாழையில் உறுதி செய்யப்பட்ட வருவாய் என்ற நிலை உருவாகியுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற தகுதியை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. இதற்கு காரணம் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மழை, மண்ணின் வளமாகும். இந்தியாவில் ஏற்றுமதி ரகங்களையும், ஒயின் ரகங்களையும் திராட்சையில் சாகுபடி செய்யும் புனேயில் கூட ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே நடைபெறுகிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு 3 அறுவடை செய்கின்றனர். இதுவே விவசாயிகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளது.
சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கம்பம், கூடலூர், அணைப்பட்டி, ராயப்பன்பட்டி போன்ற ஊர்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சை சாகுபடி குறைந்து அங்கேயும் பன்னீர் திராட்சைக்கு விவசாயிகள் மாறி உள்ளனர். தற்போது திராட்சை கிலோ ரூ.80 முதல் 100 வரை என நல்ல விலை கிடைத்து வருகிறது.
கம்பம் பகுதியில் ஆயிரம் எக்டர், சின்னமனூர் வட்டாரத்தில் 1300 எக்டர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 300 எக்டர் பரப்பில் திராட்சை சாகுபடியாகிறது.
சமீபமாக திராட்சை சாகுபடி பரப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று வாழை மாவட்டம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது செவ்வாழை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், நாழிப்பவன் கிலோ ரூ.100 க்கு மேலும் விலை கிடைத்து வருகிறது. சாகுபடி பரப்பும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து திராட்சை மற்றும் வாழை சாகுபடியாளர்கள் கூறுகையில், மகசூல் குறைவு, விலை இல்லாதது என இருந்த போதும், உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடைக்கிறது.
எனவே சமீபத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை 40 சதவீதம் பரப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நல்ல விலையும் கிடைத்து வருகிறது. நிலையான வருவாய் என்ற காரணமாக சமீபத்தில் திராட்சை மற்றும் வாழை மகசூல் பரப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர்.

