/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
/
கவுமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED : மே 03, 2024 06:09 AM

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர் ஒருவர் பூக்குழி இறங்கிய நிகழ்வு நடைபெற்றது.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர்.
விதவிதமான அலங்காரமத்தில் அம்மன் தினமும் வீதி உலா வருகிறார். மே 7 வரை திருவிழா நடைபெறுகிறது. மே முதல் தேதி அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல், முளைப் பாரி போன்ற நேர்த்தி கடன்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வாசகம் என்பவர் கோயிலிற்கு முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் வாசகம் குடும்பத்தினர் பரம்பரையாக பூக்குழி இறங்கி வருகின்றனர்.
இரவு 10 மணிக்கு கூடியிருந்த பெண்கள் குலவை சத்தம் காதை பிளக்கும் அளவிற்கு வாசகம் கையில் அக்னி சட்டி ஏந்தி பூக்குழி இறங்கினார். பின்னர் அம்மனை வழிபட்டு வீடு திரும்பினார்.
மஞ்சள் நீராட்டம் : நேற்று காலை வேலப்பர் வேளாளர் சங்கம் சார்பில் மஞ்சள் நீராட்டம் நடந்தது.
20 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அனைத்து வேளாளர் சங்கத்தினரும் மஞ்சள் நீராட்டத்தில் பங்கேற்று ஊர்வலம் வந்தனர். நகரில் தன்னார்வலர்கள், தொண்டு - நிறுவனங்கள், சமுதாய அமைப்புக்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்தனர்.