/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல் தேவை; திறந்த வெளிகளில் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
/
மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல் தேவை; திறந்த வெளிகளில் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல் தேவை; திறந்த வெளிகளில் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல் தேவை; திறந்த வெளிகளில் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஆக 12, 2024 03:42 AM
தேனி, : மாவட்டத்தில் செயல்படும் இறைச்சி கடைகளின் கழிவுகளை முறையாக அகற்றாமல் நீர்நிலைகள், ரோட்டோரங்கள், வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இறைச்சி கழிவுகளை முறையாக கையாண்டு, அதனை உரமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இங்கு வீணாகும் கழிவுகளை கடைக்காரர்கள் ரோட்டோரங்கள், குளங்கள், கண்மாய் கரைகள், வாய்க்கால்களில் கொட்டிச் செல்கின்றனர். சிலர் வனப் பகுதிகளுக்கு அருகே கொட்டிச் செல்கின்றனர். நகர் பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டும் இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இறைச்சிக் கழிவுகளை உண்ணும் நாய்களால், வெறிபிடித்து அவ்வழியாக செல்பவர்களை கடிப்பதும் தொடர்கிறது. இதனால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் நீர்நிலைகள், ரோட்டோர பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகாரர்களிடம் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கூறினாலும், பலர் கண்டு கொள்வதில்லை. இதனை முறைப்படுத்தி இறைச்சி கழிவுகளை மக்கும் உரமாக மாற்ற கடைக்காரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். மேலும் கண்ட இடங்களில் கழிவுகளை வீசும் நபர்களை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், உணவுப் பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கடை கழிவுகளை சிவாஜிநகர் புதுபஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு, அன்னஞ்சி செல்லும் ரோட்டில் வனப்பகுதியில் கொட்டிச் செல்கின்றனர். இதே நிலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டிலும் நீடிக்கிறது. இறைச்சிக் கழிவுகளை உண்ண நாய்களுக்குள் ஏற்படும் சண்டையில் டூவீலர்கள், நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இறைச்சி கழிவுகளை மக்கும் உரமாக மாற்ற அதனை வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்க வேண்டும்.