/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி- அவசியம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை தேவை
/
குமுளியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி- அவசியம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை தேவை
குமுளியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி- அவசியம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை தேவை
குமுளியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி- அவசியம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 18, 2024 04:01 AM
கூடலுார்: தமிழக கேரள எல்லையான குமுளியில் கடத்தலை முழுமையாக தடுக்க அனைத்து துறையைப் சேர்ந்த ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கேரளாவையும் தமிழகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது குமுளி. கேரள பகுதியில் அனைத்து துறையைச் சேர்ந்த சோதனைச் சாவடி ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
அதே சமயம் தமிழகப் பகுதியில் சோதனைச்சாவடி அதிகம் இல்லாததால் முழுமையான சோதனை மேற்கொள்ள முடிவதில்லை. குமுளி பழைய பஸ் டெப்போ அருகே வனத்துறை சோதனைச் சாவடி மட்டும் உள்ளது. அங்கு எந்த வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது இல்லை.
எல்லையை ஒட்டி போலீஸ் அவுட் போஸ்ட் இருந்த போதிலும், அங்கும் அவ்வப்போது மட்டுமே சோதனையில் ஈடுபடுகின்றனர். குமுளி மலைப் பாதையில் இயங்கி வந்த வருவாய் துறை சோதனை சாவடி, மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடி
கேரளா செல்ல குமுளி மலைப் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிகமாக இவ்வழியாக செல்லும்.
அதனால் லோயர்கேம்பில் இயங்கி வந்த ஆர்.டி.ஓ., சோதனைச் சாவடி முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதுவும், 13 ஆண்டுகளுக்கு முன் தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் புலம்பினர். கேரளா செல்ல பெர்மிட் பெற லோயர்கேம்ப் வந்து, திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் பழனிசெட்டிபட்டியில் இயங்கும் வாகன போக்குவரத்து சோதனை சாவடி மீண்டும் லோயர்கேம்பிற்கு மாற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக 2023 ஆகஸ்டில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் லோயர்கேம்பில் சோதனை சாவடி அமைக்க ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
குமுளியில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைப்பது அவசியம் என கோரிக்கை எழுந்துள்ளது.