ADDED : மே 03, 2024 06:13 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூ மார்க்கெட்டில் தினமும் ஐந்து டன் மல்லிகை பூக்கள் வரத்தால் மலை போல் குவிந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி பகுதிகளில் திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், கொத்தப்பட்டி கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர் நரசிங்கபுரம், ராஜதானி, சித்தார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. மழை, பனி பெய்தால் விளைச்சல் குறைந்து விடும். விளைச்சல் குறைந்த காலங்களில் ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு தினமும் 100 முதல் 500 கிலோ அளவிலான பூக்கள் வரத்து இருக்கும். விளைச்சல் அதிகமானதால் தற்போது ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தினமும் 5 டன் வரத்து உள்ளது. பயன்பாடு குறைந்து விளைச்சல் அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டில் தினமும் மல்லிகை பூக்கள் மலை போல் குவிந்து வருகிறது.
வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி மார்க்கெட்டில் தினமும் ஒரு டன் பூக்களே தேவையை பூர்த்தி செய்து விடும். தற்போது பூக்கள் கிலோ ரூ.200 அளவில் உள்ளது. மார்க்கெட்டில் தேங்கும் பூக்கள் தினமும் மதியம் 12:00 மணிக்கு மேல் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது இவ்வாறு தெரிவித்தனர்.