ADDED : மே 06, 2024 12:40 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் நேற்று பெய்த கோடை மழையில் பல ஏக்கரில் மக்காச்சோள பயிர் சாய்ந்து சேதமடைந்தன.
இப்பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் துவங்கிய கோடைமழை ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த காற்றில் லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம், டி.வி.ரெங்கநாதபுரம் பகுதியில் மரங்கள் பல இடங்களில் முறிந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. லட்சுமிபுரம் பகுதியில் இறவை பாசனத்தில் பல ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மக்காச்சோளம், சோளப் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.
விவசாயி திருப்பதி கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து மூன்று மாதங்களுக்கு முன் மக்காச்சோளம் விதைப்பு செய்தேன். இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
இந்நிலையில் நேற்று மழையுடன் வந்த சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்து விட்டது. மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகள் பலர் பாதித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.