/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : மே 11, 2024 02:31 AM

ஆண்டிபட்டி:மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு நேற்று காலை வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10:05 மணிக்கு வைகை அணையில் மூன்று முறை அபாய சங்கு ஒலிக்கச் செய்து கீழ் பகுதியில் உள்ள மூன்று மதகுகள் மற்றும் பவர்ஹவுஸ் வழியாக திறக்கப்பட்ட நீர் ஆற்றின் வழியாக பாய்ந்து சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மகேஸ்வர பாண்டியன், திருவாடானை உதவி பொறியாளர் சுகுமார், வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர்கள் பரதன், பிரசாந்த் முன்னிலையில் வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் 11:00 மணிக்கு 1600 கன அடி அடியாகவும், 11:30 மணிக்கு 3000 கன அடியாகவும் உயர்த்தப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள கண்மாய்களுக்கு நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு 915 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு மே 16 முதல் 19 வரை 4 நாட்களுக்கு 376 மில்லியன் கனடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு மே 21 முதல் 26 வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து செல்வதால் இம் மாவட்டங்களில் கரையோர பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ , குளிக்கவோ செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
மின்உற்பத்தி துவக்கம்
ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணையில் மின் உற்பத்தி நிலையம் வழியாக வினாடிக்கு 1100 கனஅடியும், கீழ் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக வினாடிக்கு 1900 கன அடி நீரும் வெளியேறுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம் போல் வினாடிக்கு 72 கன அடி நீர் வெளியேறுகிறது.
மின் உற்பத்தி நிலையம் வழியாக வெளியேறும் நீரில் இரு யூனிட்டுகளில் தலா 3 மெகாவாட் வீதம் 6 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.