/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்; நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல்
/
இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்; நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல்
இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்; நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல்
இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்; நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல்
ADDED : ஆக 09, 2024 12:30 AM

தேனி: தேனி மாவட்டத்தில் இரு இடங்களில் நிரந்த நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உள்ளதாக நுகர்பொருள் மண்டல மேலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை தரமான வகையில் 517 ரேஷன் கடைகள் மூலம் உரிய நேரத்தில் சப்ளை செய்வது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முக்கிய பணியாகும்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது என இக் கழகத்தின் தேனி மாவட்ட மண்டல மேலாளராக செந்தில் குமார் உள்ளார். இவர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
நுகர்பொருள் வாணிப கழகத்தின் பணி என்ன
பொது வினியோக திட்டத்திற்கு தேவையான பொருட்களை தரமாக, சரியான எடையில் வழங்குவது. நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, அதனை அரவை செய்து பொது வினியோக திட்டத்திற்கு பயன்படுத்துவது உள்ளிட்டவை நுகர்பொருள் வாணிப கழகத்தின் பணி.
எத்தனை ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்குகிறோம்
மாவட்டத்தில் உள்ள 517 ரேஷன்கள் கடைகளுக்கு தாலுகா கிடங்குகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இது தவிர 449 காலை உணவுத்திட்ட மையங்கள், 1286 சத்துணவு மையங்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி, பாசிபயிறு, கொண்டக்கடலை உள்ளிட்டவை வழங்கபடுகிறது.
மாதம் எத்தனை டன் உணவு தானியங்கள் கையாளப்படுகிறது
ரேஷன் கடைகள், காலை உணவுத்திட்ட, சத்துணவு திட்ட மையங்களுக்கு வழங்குவதற்காக அரிசி 6,900 டன், சர்க்கரை 510 டன், கோதுமை 200 டன், துவரை 350 டன், பாமாயில் 3.5லட்சம் பாக்கெட்டுகள், பாசிபயிறு 4 டன், கொண்டை கடலை 5 டன் மாதந்தோறும் கையாளப்படுகிறது.
எத்தனை கோடவுன்கள், அவற்றின் கொள்ளளவு என்ன
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி, உத்தமபாளைய கோடவுன்கள் தலா 2500 டன், போடி, பெரியகுளம் கோடவுன்கள் தலா 2ஆயிரம் டன், தேனி குடோன் 4200 டன் கொள்ளவு கொண்டவை. மாவட்டத்தில் 13,200 டன் வரை உணவு தானியங்கள் சேமிக்கும் வசதி உள்ளது.
ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புவது குறித்து...
கலெக்டர் அனுமதித்த வழித்தடங்களில் குறிப்பிட்ட தேதியில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இரு முறையில் பொருட்கள் அனுப்படுகிறது. ஒன்று முன்நகர்வு, மற்றொன்று மாத ஒதுக்கீடு. முன்நகர்வு என்பது ரேஷன் கடைக்கு தேவையான பொருட்களை இருப்பை பொருத்து மாதத்தின் 21 ம் தேதி முதல் 30 தேதிக்குள் அனுப்புவது. இதில் அனுப்பபட்ட அளவு போக மீதியுள்ளதை மாத ஒதுக்கீட்டில் அனுப்புகிறோம். முன்நகர்வில் 40 சதவீதம், மாத ஒதுக்கீட்டில் 60 சதவீதம் அனுப்படுகிறது.
ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக அனுப்புவதாக புகார் உள்ளதே
குடோன்களில் மூடைகளை தைக்க மாதம் ஒரு வண்ணத்தில் நுால் பயன்படுத்தப்படுகிறது. கூட்டுறவு துறையின் நகர்வு பணியாளர் முன்னிலையில் பொருட்கள் எடை போட்டு அனுப்பபடுகிறது. அனைத்து குடோன்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. புகார் கூறினால் கடைகளுக்கு நேரில் சென்று கடை பணியாளர் முன் சோதனை செய்து காட்டுகிறோம். சமீபத்தில் வீரபாண்டி பகுதியில் புகார் வந்தது. அங்கு கடைபணியாளர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனரே
மாவட்டத்தில் தரமான அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. அரிசி சரியில்லை என எந்த புகாரும் வரவில்லை. குடோன்களில் அரிசியை பூச்சி தாக்குதல், பூஞ்சை தாக்குதல் இன்றி பாதுகாத்து வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.
இதில் சிக்கல்செல் அனிமியா, தலசிமியா நோயாளிகள் உள்ள ரேஷன் கடைகளுக்கு மட்டும் இந்த அரிசி அனுப்பபடுவதில்லை. இந்த அரிசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
நெல் கொள்முதல் நிலையங்கள் எத்தனை செயல்படுகிறது
2023-2024ல் மேல்மங்கலம், கெங்குவார்பட்டி, கீழவடகரை, தாமரைகுளம், குளள்புரம், வீரபாண்டி, கம்பம், கூடலுார், சின்னமனுார், குன்னுார் என மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. இங்கு விவசாயிகளிடமிருந்து 7ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ரூ.1.62 கோடி, அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது.
நெல் அரவை ஆலை அமைக்கப்படுமா
தினமும் 200டன் நெல் அரவை செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக பணிகள் நடந்து வருகிறது. தேனியில்ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட புதிய குடோன் அமைக்க பணி நடந்து வருகிறது. கொள்முதல் நிலையங்களில் புகார்களை களைய என்ன நடவடிக்கைகொள்முதல் நிலையங்களில் புகார்களுக்கு இடமின்றி பணிகள் நடக்கிறது. ஏதேனும் குறைகள் இருந்தால், உடனடியாக தெரிவிக்குமாறு விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சுமை துாக்கும் தொழிலாளர்கள் தனியார் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். யாரேனும் தேவையின்றி பணம் கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் ரயிலில் வருவது பற்றி
இதற்கு முன் திண்டுக்கல் சென்ற பொருட்கள் லாரியில் எடுத்து வரும் சூழல் இருந்தது. இதனால் கூடுதல் செலவு, கால விரையம் ஏற்பட்டது. தற்போது நமது மாவட்டத்திற்கே ரயிலில் வருவதால் உரிய நேரத்திற்கு பொருட்கள் வருகிறது. கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படுகிறது.
அரசின் குறைந்த விலை சிமென்ட் விற்பனை பற்றி
அரசின் குறைந்த விலை சிமென்ட் மூடை ரூ. 216 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் பழுது நீக்கும் பணி என்றால், வீ.ஏ.ஓ., சான்றிதழ் பெற்று வந்தால் 25 மூடைகள், புதிய கட்டங்களுக்கு என்றால் கட்டட அனுமதி சான்றுடன் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 700 மூடை வரை வழங்குகிறோம். தேவையானவர்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் விபரங்களை பெறலாம். என்றார்.