ADDED : ஆக 06, 2024 05:26 AM
கம்பம்: காய்கறிகள் விலை குறைந்த நிலையில் பச்சை மிளகாய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.160 ஆக உயர்ந்தது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்கறி விலை உச்சத்திற்கு சென்று குறைய துவங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் கிலோ ரூ.85க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது 65, தக்காளி கிலோ ரூ.28 ல் இருந்து ரூ.22, வெண்டை ரூ. 34ல் இருந்து ரூ.26, கொத்தவரங்காய் ரூ.54ல் இருந்து ரூ. 32, பாகல் ரூ.50 ல் இருந்து ரூ.36, புடலங்காய் ரூ.40 ல் இருந்து ரூ.32 அவரை ரூ.80ல் இருந்து ரூ.60 ஆக குறைந்து வருகிறது.
ஆனால் கடந்த 15 நாட்களாக பச்சை மிளகாய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கிலோ ரூ.110 என்பது நேற்று ரூ.130 ஆக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.140 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது.
விலை உயர்விற்கான காரணம் என்று உத்தமபாளையம் உதவி தோட்டக் கலை அலுவலர் மகாலிங்கம் கூறுகையில், பச்சை மிளகாய்க்கு ஜூன், ஜூலையில் தடுப்பாடு இருக்கும். இந்தாண்டு கடும் வெயில், தற்போது கூடுதல் மழையால் செடியில் இருந்து பூக்கள் உதிர்வு இருந்தது. ஆந்திராவில் கடும் வறட்சி நிலவி தற்போது கூடுதல் மழை பெய்வதால் அங்கு நடவு செய்ய முடியாத நிலை உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் வெட்டுக் காடு, லோயர்கேம்ப், சுருளிப்பட்டி அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபரில் மகசூல் வரத் துவங்கும். வரத்து குறைந்ததால் தான் இந்த விலை உயர்வு என்கிறார்.