/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழையால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உஷார்
/
தொடர் மழையால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உஷார்
ADDED : செப் 02, 2024 12:14 AM
கம்பம்: கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட சுகாதாரத்துறை இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மழை, வெயிலால் சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுகிறது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்த மழை நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.
மழை பெய்து வருவதால், வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கிராமங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது அதிகமாக உள்ளது.
இதனால் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவலாம். மேலும் சாதாரண வைரஸ் காய்ச்சலும் பரவலாக உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களை ஊராட்சி நிர்வாகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகளில் நல்ல தண்ணீரை அதிக நாள் சேமித்து வைப்பதை தவிர்க்கவும், தண்ணீரை மூடி வைக்கவும், குடிநீரை நன்கு காய்ச்சி பருக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் உத்தரவை தொடர்ந்து அத்துறையினர் கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.