/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை கால நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் கவனம் தேவை சித்தா டாக்டர் சுவாமிநாதன் ஆலோசனை
/
கோடை கால நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் கவனம் தேவை சித்தா டாக்டர் சுவாமிநாதன் ஆலோசனை
கோடை கால நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் கவனம் தேவை சித்தா டாக்டர் சுவாமிநாதன் ஆலோசனை
கோடை கால நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் கவனம் தேவை சித்தா டாக்டர் சுவாமிநாதன் ஆலோசனை
ADDED : மே 07, 2024 05:49 AM
உத்தமபாளையம்: கோடைகால நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சித்தா டாக்டர் சுவாமிநாதன் ஆலோசனை வழங்கி உள்ளார்.-
கோடை காலத்திலும் குளிர் காலம் போலவே பாக்டீரியா, வைரஸ் தொற்று காரணமாக சுவாச பாதை பாதிப்படைந்து இருமல், தலைவலி ஏற்படும்.
7 நாட்களில் அதுவே சரியாகி விடும். இஞ்சி ஒரு துண்டு, வெற்றிலை ஒன்று, கறிமஞ்சள் ஒரு துண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொற்று குறையும்.
கோடையில் அடுத்து நீர்சத்து இழப்பு காரணமாக மலச்சிக்கல் ஏற்படும். இரவு உணவு உண்டபின் உடனே படுப்பதை தவிர்க்க வேண்டும். மாலையில் பழங்களை சாப்பிடலாம். எளிய உணவு எடுத்து கொள்ள வேண்டும்.
வெயிலால் கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. ரோஜா இதழ் ஊறிய நீரை பஞ்சில் 'நனைத்து துடைக்கலாம். நந்தியா வட்டம் பூவை வெள்ளைத் துணியில் சுற்றி கண்களில் கட்டி கொள்ளலாம். உள்ளங்கையில் பசுநெய் தேய்த்து கொள்வதும், மருதாணி இட்டுக் கொள்வதும் நல்லது.- கரிசாலை மை கொண்டு கண்ணுக்கு அஞ்சனம் இடலாம்.
கெட்டுப்போன உணவுகள், சுகாதாரமில்லாத பானங்கள் மூலம் டைபாய்டு வர வாய்ப்புண்டு.
குடிநீர், குளிர்பானம் மீது கவனம் தேவை. மதியம் குறைந்த நேர தூக்கம் நல்லது. மது கூடாது. இது உடலில் உள்ள நீர்ச்சத்தை எடுத்து கொள்ளும்.
உணவுகள் : மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்,காரம், பொறித்த உணவுகள் கூடாது. மல்லிகை சம்பா, கல்லுண்டை சம்பா, சீரக சம்பா, அன்னமழகி ஆகிய அரிசி வகைகள் சிறந்தது. நீராகாரம் அருந்துவதால் குடலில் நன்மை தரும் கிருமிகளின் அளவு அதிகரிக்கும். கம்பங் கூழ், கேழ்வரகு சிறந்த கோடை உணவுகள். கூழ் எளிதில் செரித்து விடும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் ரொட்டி, தோசை செய்து சாப்பிடலாம். இளநீர், வெண்ணெய் நீக்கிய மோர், பானக்காரம், மாம்பழம், நொங்கு,தர்ப்பூசணி, வெள்ளரி சிறந்தது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும். இரவில் அமுக்ரா சூரணம் கலந்த பால் நல்லது. உடற்பயிற்சிகளை காற்றோட்டம் உள்ள இடங்களில் செய்ய வேண்டும்.
குறுநடை அதுவும் வெயில் குறைந்த காலை, மாலை நேரங்களில் நல்லது.