/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தேக்க முடியாத தாமரைக்குளம் கண்மாய்
/
ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தேக்க முடியாத தாமரைக்குளம் கண்மாய்
ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தேக்க முடியாத தாமரைக்குளம் கண்மாய்
ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தேக்க முடியாத தாமரைக்குளம் கண்மாய்
ADDED : மே 02, 2024 05:48 AM

உத்தமபாளையம்: கண்மாய்கள், குளங்கள் சிறியது, பெரியது என அனைத்தும், எல்லா ஊர்களிலும் ஆக்கிரமிப்பில் சிக்கி தனிநபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி காடுகளில் இருந்த கண்மாய்கள் காணாமல் போய் விட்டன. ஆற்றுப் பாசன நெல் வயல்களுக்கு பயன்படும் கண்மாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவில் தூர் வாராததால் ஆகாய தாமரை வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உத்தமபாளையத்தில் பாசனத்திற்கு பயன்படும் தாமரைக்குளம் கண்மாய் உருமாறி வருகிறது.
உத்தமபாளையத்திற்கு கிழக்கு திசையில் வாய்க்கால்பட்டியையும், கோகிலாபுரத்தையும் இந்த கண்மாய் இணைக்கிறது. 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் தெற்கு, வடக்கு திசைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னந் தோப்புகளாகவும், நெல் வயல்களாகவும் மாறி உள்ளன.
உத்தமபாளையத்தில் நெல் பிரதானமாக சாகுபடியாகிறது. கால்நடை வளர்ப்பும் இங்குள்ளவர்களால் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. முழுக்க முழுக்க முல்லைப் பெரியாற்று பாசனமாகும். இருந்த போதும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைத்திருக்கவும் இங்குள்ள தாமரைக்குளம் கண்மாய் ஏற்படுத்தப்பட்டது. இக்கண்மாய் 55 ஏக்கரில் உள்ளது. கண்மாய் முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக மாறி உள்ளது. கருவேல மரங்கள் வளர்ந்து மரக்கூட்டங்களாக காட்சி தருகிறது. குறிப்பாக மண் மேவி மேடாக மாறி உள்ளது. கண்மாய் உருமாறி கட்டாந்தரையாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. கண்மாயில் கணிசமான பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. அப்பகுதிகளை மீட்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் அதிகாரிகள் களம் இறங்கி ஆக்கிரமித்துள்ள கண்மாயில் வளர்க்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு நம்பர் எழுதிச் சென்றார்கள். முல்லைப் பெரியாற்று நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. மழை காலங்களில் சேகரமாகும் தண்ணீரும் நிரம்பி நிற்க வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

