/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறைந்த இடத்திலும் காய்கறி,பழச் செடிகள் வளர்க்கலாம்; விழிப்புணர்வில் தேனி இல்லத்தரசிகள்
/
குறைந்த இடத்திலும் காய்கறி,பழச் செடிகள் வளர்க்கலாம்; விழிப்புணர்வில் தேனி இல்லத்தரசிகள்
குறைந்த இடத்திலும் காய்கறி,பழச் செடிகள் வளர்க்கலாம்; விழிப்புணர்வில் தேனி இல்லத்தரசிகள்
குறைந்த இடத்திலும் காய்கறி,பழச் செடிகள் வளர்க்கலாம்; விழிப்புணர்வில் தேனி இல்லத்தரசிகள்
ADDED : பிப் 24, 2025 04:39 AM

விவசாய நிலங்கள் பல இடங்களில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. அதே சமயம் நகர் பகுதிகளில் மாடித்தோட்டம், தொட்டிகளில் காய்கறி, பழச்செடிகள் வளர்த்து பராமரிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவு செயற்கை உரங்கள் பயன்படுத்தாத, மருந்து தெளிக்காத காய்கறிகளை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம் என்பதை அனைவரும் உணர துவங்கி உள்ளனர்.
தேனி நகர் பகுதியில் பல இடங்களில் இல்லத்தரசிகள் கைவண்ணத்தில் மாடிகள், வீட்டின் முகப்புப் பகுதிகளில் மூலிகை, காய்கறி, அலங்கார, பூ, பழச்செடிகள் வளர்க்கப்பட்டு உள்ளன. வீடுகளில் செடிகள் பராமரிப்பில் பள்ளி மாணவர்கள் ஈடுபடும் போது, அவர்களுக்கு விவசாய சாகுபடி விபரங்கள், நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள இயலும். இவ்வாறு, 'செடிகள் வளர்க்க ஆர்வம் இருந்தால் வீட்டில் சமையலுக்கு தேவையான செடிகள், அலங்கார செடிகளையும் வளர்த்து அசத்தலாம்.' என, தேனியை சேர்ந்த இல்லத்தரசிகள் செல்வக்கனி, கவிதா தெரிவித்துள்ளனர். இவர்களின் வீடு தேனி சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் சிறு, சிறு பிளாஸ்டிக் தொட்டிகள், உடைந்த குடங்கள், தண்ணீர் கேன்களில் கற்றாழை, பிரண்டை, கீரை வகைகள், கறிவேப்பிலை, மாதுளை, திராட்சைக் கொடி, பேரிட்சை, இஞ்சி என, பல்வேறு வகை செடிகள் என வளர்த்து அசத்துகின்றனர் இல்லத்தரசிகளான செல்வக்கனி, கவிதா.
உரமாகும் காய்கறி கழிவுகள்
கவிதா, சோலைமலை அய்யனார் கோயில் தெரு: வீட்டின் முன் இருந்த சிறிய பகுதியில் செடி வளர்க்க ஆசைப் பட்டோம். அதற்காக ஒன்றிரண்டு தொட்டிகளில் செடிகள் வைத்து வளர்க்க துவங்கினோம். பின்னர் குள்ளப்புரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளில் உள்ள நாற்று பண்ணைகளில் சில செடிகள் வாங்கி வைத்து பராமரிக்க துவங்கினோம். இன்று 35க்கும் மேற்பட்ட தொட்டிகளில் செடிகள் பராமரிக்கிறோம்.
வீட்டு காய்கறி கழிவுகள், தேங்காய் நார், முட்டை ஓடு உள்ளிட்டவற்றை உரமாக இடுகிறோம். கீரைகள் வாங்கும் போது இலைகள் எடுத்த பின், தண்டுப் பகுதிகளை நடவு செய்கிறோம். அவை நன்கு வளர்ந்த பின் அதனை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டிகளில் வளர்ந்துள்ள களைகளை அகற்றுகிறோம். இச்செடிகளை பராமரிக்கும் போது மன அமைதி கிடைக்கிறது. பராமரிப்பு, புதிய செடிகள் வைக்கும் போது குடும்பத்தினர் உதவுகின்றனர்., என்றார்.
ஆர்வம் அவசியம்
செல்வக்கனி, இல்லத் தரசி : செடிகள் வளர்ப்பதற்கு தேவையான மண்ணை தோட்டங்களில் இருந்து கொண்டு வருகிறோம். சிறிய இடமாக இருந்தாலும் செடிகள் பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் தேவையான செடிகளை பராமரிக்கலாம்.
நாம் பராமரிக்கும் போது குழந்தைகளும் ஈடுபடுவார்கள். இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். அவர்கள் பெரியவர்கள் ஆனதும் இதனை தொடர்வார்கள். சிறிய தொட்டிகளில் செடிகள் பராமரிக்கும் போது, தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல் மண் இறுகினால் செடிகள் பாதிக்கப்படும். தொட்டிகள் தயார் செய்யும் போது செம்மண்ணுடன் தேங்காய் நார், மணல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் செடிகள் நன்கு வளரும். காய்கறி கழிவுகளுடன், நன்கு காய்ந்த எருவை உரமாக பயன்படுத்துகிறோம்., என்றார்.

