/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
ADDED : மார் 09, 2025 03:58 AM

தேனி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசு துறைகள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 620 மகளிருக்கு ரூ. 47.44 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயசேகர், நகராட்சி தலைவர்கள் ரேனுப்பிரியா (தேனி) சுமிதா (பெரியகுளம்) ராஜராஜேஸ்வரி(போடி), அய்யமாள்(சின்னமனுார்), வனிதா(கம்பம்) உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
போலீஸ் துறை சார்பில் மகளிருக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எஸ்.பி., சிவபிரசாத் துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., சுகுமார் முன்னிலை வகித்தார்.
பங்களா மேட்டில் துவங்கி பழனிசெட்டிபட்டி வரை போட்டி நடந்தது. முதல் 25 இடங்களை வென்றவர்களுக்கு தலா ரூ.500, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடந்த ஓவிய போட்டியில் கல்லுாரி மாணவர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பரிசு வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி விழாவை ஒருங்கிணைத்தார்.
தேனி நலம் மருத்துவமனையில் நடந்த விழாவில் மருத்துவமனை மருந்தக நிர்வாக இயக்குநர் வனிதா தலைமை வகித்தார்.
தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, ஏ.சி.வி., மில்ஸ் நிர்வாக இயக்குநர் சத்தியபாமா, தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, பெண் ஆட்டோ ஓட்டுநர் டெபோரல் எலியா, யுடியூபர் ஆதிரா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சமுதாய வளர்ச்சியில் மகளிர் முக்கியத்துவம், மன தைரியம், குடும்பத்தினர் ஒத்துழைப்பு பற்றி விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.
தேனி ரத்னம்நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
சாதனை புரிந்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மகளிர் அணி நிர்வாகிகள் திவ்யசூர்யா, கஸ்துாரி, திவ்யா, சங்கீதா, பகவதி விழாவை ஒருங்கிணைத்தனர்.
சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரப்பாண்டியன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சாத்துார் ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லுாரி தமிழ்துறை உதவி பேராசிரியர் கவிதா மகளிர் தினம் பற்றி பேசினார்.
தமிழ்துறை பேராசிரியர்கள், மகளிர் மேம்பாட்டு மன்றத்தினர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
பா.ஜ., ஊர்வலம்: மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ஜ., சார்பில் தேனி கட்சி அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை மகளிரணி மாவட்ட தலைவர் முத்துமணி தலைமையில் ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் வழங்கிய மனுவில் 'மகளிர் சுயதொழில் கடன் பெறும் முறைகளை எளிதாக்க வேண்டும்.
மைக்ரோ பைனான்ஸ், கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு சுயஉதவி குழுக்கள் மூலம்கடன் வழங்கிட வேண்டும்', என வலியுறுத்தினர்.
ஆண்டிபட்டி: தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா ஊர்வலம் ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பெண்கள் ஊர்வலத்தை எஸ்.ஐ.சவரியம்மாள் தேவி துவக்கி வைத்தார்.
கொண்டம்மநாயக்கன்பட்டி பி.ஆர்.கே. பள்ளி வளாகத்தில் நடந்த மாநாட்டில் தேன் சுடர் பெண்கள் இயக்க தலைவர் சரிதா தலைமை வகித்தார்.
பொருளாளர் பாண்டீஸ்வரி வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய், சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன், ஆரோக்கிய அகம் நிறுவனம் சார்பில் இயக்குனர் சாபு சைமன், அலுவலர்கள் சதீஷ் ரெஜினால்ட் முருகேசன் ஆகியோர் பேசினார்.
இயக்க ஆலோசகர் லட்சுமி நன்றி கூறினார்.
பெண்கள் குழு உறுப்பினர்களின் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.