ADDED : ஜூன் 21, 2024 05:02 AM

கூடலுார்: உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்து மாணவர்கள் அசத்தினர்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி2014 ல் நடந்த ஐநா சபையில் உரையாற்றினார். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. ஐக்கியநாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பத்தாவது ஆண்டாக உலக யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் முதல்வர்கள் பால கார்த்திகா, ஷகீலா முன்னிலையில் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், ஆனந்தி முன்னிலை வகித்தனர்.
யோகா நிபுணர் ராஜேந்திரன், மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பத்மாசனம், வஜ்ராசனம், ஏகபாத சிக்கந்தாசனம், புஜங்காசனம், யோக நித்திரை உள்ளிட்ட ஆசனங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர். யோகா மூலம் உடல் நலம் நோயின்றி ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடன் நிகழ்வதற்கு இக்கலை மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
வைகை அணையில் மாணவர்கள் யோகா
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி மாணவ மாணவிகள் 60 பேர்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வைகை அணையின் மேல் தளத்தில் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.
வைகை அணைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மாணவ மாணவிகளின் யோகாவை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சேர்மன் ராஜாங்கம், செயல் தலைவர் ஜெகதீஷ், துணை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளை பாராட்டினர்.