ADDED : ஜன 13, 2024 03:53 AM
பெரியகுளம், : பெரியகுளம் அருகே பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு குவிந்தது.
பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி திவ்யா 21. நேற்று அதிகாலை 3:55 மணிக்கு திவ்யா பிரசவவலியால் அவதிப்பட்டார்.
தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 108 ஆம்புலன்சை டிரைவர் பாண்டியன் ஓட்டி வந்தார். வீட்டிற்கு சென்ற மருத்துவ உதவியாளர் செல்வம், திவ்யாவை ஆம்புலன்சில் ஏற்றினார். சிறிது நேரத்தில் திவ்யாவிற்கு பனிக்குடம் உடைந்தது. தாயாக மாறிய மருத்துவ உதவியாளர் ஆம்புலன்சில் மருத்துவ உபகரணங்களை கொண்டு திவ்யாவிற்கு சிகிச்சையளித்தார்.
இதில் சுகப்பிரசவமாகி திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர் செல்வம், டிரைவர் பாண்டியனை, திவ்யா கணவர் ரகுபதி, மருத்துவமனை செவிலியர்கள் பாராட்டினர்.-