/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனநல சிகிச்சையில் 360 பேர் குணமடைந்து குடும்பத்துடன் இணைப்பு மனநல காப்பக, மறுவாழ்வு சிகிச்சை மைய டாக்டர் தகவல்
/
மனநல சிகிச்சையில் 360 பேர் குணமடைந்து குடும்பத்துடன் இணைப்பு மனநல காப்பக, மறுவாழ்வு சிகிச்சை மைய டாக்டர் தகவல்
மனநல சிகிச்சையில் 360 பேர் குணமடைந்து குடும்பத்துடன் இணைப்பு மனநல காப்பக, மறுவாழ்வு சிகிச்சை மைய டாக்டர் தகவல்
மனநல சிகிச்சையில் 360 பேர் குணமடைந்து குடும்பத்துடன் இணைப்பு மனநல காப்பக, மறுவாழ்வு சிகிச்சை மைய டாக்டர் தகவல்
ADDED : பிப் 23, 2024 05:53 AM

தமிழ்நாட்டில் 2018ல் சென்னை திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், தேனி என 5 மாவட்டங்களில் ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களுக்கான காப்பகம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனையில் இயங்கும் இம் மையம் முன்மாதிரி மறுவாழ்வு மையமாக திகழ்கிறது.
இங்கு 50 படுக்கை வசதிகளுடன் நிலைய மருத்துவ அலுவலரான டாக்டர் ராஜேஷ் கண்காணித்து வருகிறார். இவருக்கு கீழ் மன நல சிகிச்சை டாக்டர் பாரத் உட்பட 3 டாக்டர்கள், 15 பணியாளர்கள், 6 மனநல சமூக களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் 11 பேர் என இணைந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
மனநல பாதிப்பின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு,குணமடைந்தவுடன் குடும்பத்தினர், உறவினர்களிடம் இணைத்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர்.
மாநிலத்தின் சிறந்த ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களுக்கான காப்பகம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கான சிறந்த சேவைக்காக கடந்த 2019, 2021 ல் கலெக்டர்கள் பல்லவிபல்தேவ், வெங்கடாசலம் ஆகியோர் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர். இம்மையம் துவங்கப்பட்ட நாள் முதல்தற்போது வரை ஆதரவற்ற நிலையில் மனநோயாளிகளாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்கள் 650 பேர் ஆகும். தற்போது வரை அவர்களின் குடும்பத்தினருடன் 360 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஆதரவற்ற நிலையில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து ஆந்திராவை சேர்ந்த 7 பேர், மஹாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர், கேரளாவை சேர்ந்த 5 பேர்,கர்நாடாகாவை சேர்ந்த 2 பேர், டில்லியை சேர்ந்த 3 பேர் என 23 பேர் சிகிச்சை அளித்து குணப்படுத்தி அம்மாநில அரசு, சமூகநலத்துறை, மாநில அரசின் உதவியால் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து மறுவாழ்வு பெற்றுள்ளனர். இம்மையத்தின் சேவை, வளர்ச்சி திட்டங்கள், தினசரி பணிகள் குறித்து தினமலர்நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக மாவட்ட மன நல டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:
ஒருவர் மனநோயாளி என்பதை எவ்வாறு கண்டறிவது
மிக எளிதாக மனநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து விடலாம். உதாரணத்திற்கு சிரிப்பது நம் இயல்பு. சிரித்து கொண்டே இருப்பது இயல்பை மீறிய செயலாகும். இம்மாதிரியான மனபாதிப்பு இருப்பது, மனபிறழ்வு ஏற்பட்டதற்கான வெளிபாடாகும். இந்த வெளிப்பாடு சிரிப்பில் மட்டும் வெளிப்படாது. மனிதர்களின் அனிச்சை செயல் மாறுபாடுகளில் கூட இது வெளியே தெரியலாம். மிக புரியும்படி கூறுவது என்றால்,நாம் பொதுவாக இடம், பொருள், ஏவல் என்ற மனநிலையில் பேசுவோம். பகுந்தறிந்து பேசுவம், நடந்து கொள்ளும் நடைமுறைகள் மனநிலை பாதிப்படைந்தவர்களுக்கு இருக்காது. அவர்கள் இயல்பை விட்டு ஒரு படிக்குமேல் நடந்து கொள்வர்.இதனால் அவர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது. ஏனெனில் அவர்கள் ஒரு குழந்தை மாதிரி. இதனை வைத்து நாம்கண்டறிந்து விடலாம்.
பாதிப்பு உள்ளவர்களை காப்பகத்தில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன
பெற்றோரை சேர்க்க முடியாது. அது சட்டப்படி குற்றம். ஆதரவற்ற நிலையில் பெற்றோர் கைவிடப்படுவது தெரியவந்தால் சமூகநலத்துறையினர் பிள்ளைகள் மீது புகார் அளிக்கலாம். அதுதவிர உண்மையிலேயே ஆதரவற்ற நிலையில் இருந்து மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் '102' என்ற அவசர வாகன எண்ணில் அழைத்தால், மனநல பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான ஆம்புலன்சில் ஏற்றி காப்பக்கத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இரண்டாவது பொது மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களைஆட்டோவில் ஏற்றி, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சி.எஸ்.ஆர்., ரசீது பெற்று, நேராக காப்பகத்தில் ஒப்படைத்து விடலாம். அதுதவிர இயல்பை விட மீறி, பிறர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொண்டால், பாதுகாப்பாக நேரடியாக அவர்களை மீட்டு, பொதுமக்கள் காப்பகத்தில் ஒப்படைக்கலாம்.
குடும்பத்தினர் உள்ளவர்கள் மனநலம் பாதித்தோருக்கான சிகிச்சை பற்றி
மாவட்ட மனநல சிகிச்சை திட்டத்தில் 10 படுக்கை வசதிகள் கொண்ட, உறவினர்கள் கண்காணிப்பில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்க தனி வார்டு வசதியும் உள்ளது. அதில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு பின் எவ்வளவு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்
சவாலான இப்பணியை மேற்கொண்டு மீட்டெடுக்கப்பட்ட 650 பேருக்கு சிகிச்சை அளித்து, 360 பேர் குணமடைந்தனர். அவர்களை அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் அவரவர் குடும்பத்தினருடன் இணைத்துள்ளோம். இது மிகப்பெரிய மனநிறைவை தருகிறது. மீதியுள்ளவர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு கேரளா, வடமாநிலங்களின் அரசின் உதவியுடன் குடும்பத்தினருடன் இணைத்துள்ளோம். தற்போது 38 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.இதில் உறவினர்கள் இல்லாதவர்கள் யார் உதவியையும் நாடாமல் சுயசார்பு வாழ்க்கையை மீட்டெடுக்க சுயதொழில் பயிற்சிகளான டெய்லரிங், பேப்பர் கவர் செய்வது, மூலிகை தோட்டம் பராமரிப்பது, பொம்மைகள் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.
மறுவாழ்வு திட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு உள்ளதா
இவர்களுக்கான உணவு, உடை, தினசரி தேவைக்கான பொருட்கள் வாங்க தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் நிதியுதவி வழங்குகின்றனர்.மருத்துவமனை சார்பிலும் தினசரி உணவு வழங்கப்படுகிறது.
இதனால் பொது மக்கள் தங்களது பிறந்தநாள், திருமண நாள், பிற நல்ல நாட்களில் இங்கு முன்பதிவு செய்து உணவு, உடை, பொருட்கள், நிதியுதவி வழங்கலாம். உணவு பரிசோதனை செய்த பின், அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவர்.
மனநிலை பாதிப்பு சிகிச்சை முறைகள் குறித்து
மனநல பாதிப்பிற்கு மருந்து மாத்திரைகள் வழங்கி குணப்படுத்துகிறோம். மனநிலை பாதிப்புடன் கால் முறிவு ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் தேனி பங்களாமேடு 65 வயது ஆண், போடி ரெங்கநாதபுரம் 40 வயது ஆண், ஆண்டிபட்டி ரோசனம்பட்டி 40 வயது ஆண் உள்ளிட்ட மூவருக்கும் மூட்டு சீரமைப்பு டாக்டர்களுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். தற்போது மூவரும் நலமாக, குணமடைந்துள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு 94439 28741 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.