/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் 85 கட்டடங்கள் கையகப்படுத்தினர்
/
பூப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் 85 கட்டடங்கள் கையகப்படுத்தினர்
பூப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் 85 கட்டடங்கள் கையகப்படுத்தினர்
பூப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் 85 கட்டடங்கள் கையகப்படுத்தினர்
ADDED : பிப் 09, 2024 07:18 AM

மூணாறு: பூப்பாறையில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுபடி ஆக்கிரமிப்பில் இருந்த 85 கட்டடங்கள், மூன்று வழிபாட்டு தலங்கள், ஒரு குருசடி ஆகியவற்றை வருவாய் துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
இடுக்கி மாவட்டத்தில் கேரள, தமிழக எல்லையான போடிமெட்டில் இருந்து பத்து கி.மீ., தொலைவில் பூப்பாறை நகர் உள்ளது. அங்கு இரண்டு ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. அவை மட்டும் இன்றி பூப்பாறையில் பன்னியாறு ஆற்றோரம் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக வழக்கில் தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். அது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ்க்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அவர் தாக்கல் செய்த அறிக்கையின்படி 56 கட்டடங்களை அகற்ற ஜன.17ல் உயர்நீதி மன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி இடுக்கி சப் கலெக்டர் அருண் எஸ். நாயர், தாசில்தார்கள் சீமாஜோசப், ஜோஸ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று பூப்பாறைக்குச் சென்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை துவக்கினர். பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க அங்கு கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
போலீசாருடன் தள்ளு, முள்ளு
மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி, சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. மதுபாபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர். வருவாய் துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து கடைகளில் உள்ள பொருட்களை அகற்ற கால அவகாசம் வழங்கினர். அகற்றிய நிலையில் பெரும்பாலானோர் பொருட்களை அகற்றாமல் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டனர். அதனை அதிகாரிகள் ஏற்காததால் வர்த்தகர்கள் கடுமையாக எதிர்த்தனர். அதனால் போலீசாருக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் ஏழு பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் நிலைமை கட்டுக்குள் வந்தது.
கட்டடங்களுக்கு சீல்
பூப்பாறை நகரில் பன்னியாறு ஆற்று கரையோரம், அரசு புறம்போக்கு ஆகியவற்றில் 56 பேரிடம் இருந்த 85 கட்டடங்கள், மூன்று வழிபாட்டு தலங்கள், ஒரு குருசடி ஆகியவற்றை கையகப்படுத்தினர். அதில் 13 குடியிருப்பு கட்டடங்கள் காலி செய்யவில்லை. எஞ்சிய கட்டடங்கள் ' சீல்' வைக்கப்பட்டன.

