/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெருங்கற்கால பண்பாட்டை விளக்கும் முதுமக்கள் தாழி வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
/
பெருங்கற்கால பண்பாட்டை விளக்கும் முதுமக்கள் தாழி வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
பெருங்கற்கால பண்பாட்டை விளக்கும் முதுமக்கள் தாழி வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
பெருங்கற்கால பண்பாட்டை விளக்கும் முதுமக்கள் தாழி வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
ADDED : நவ 06, 2025 07:42 AM

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தில் முதல்பாண்டி என்பவர் வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பெரும் கற்கால பண்பாட்டை விளக்கும் முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதுமக்கள் தாழியை பார்வையிட்ட ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:
தொல்லியல் வரைபடத்தில் தேனி மாவட்டம் ஒரு வளமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. வைகை நதி நாகரீகத்துடன் நெருங்கிய தொடர்புடைய இப்பகுதியில் சங்க காலம், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த, மக்கள் விட்டுச் சென்ற தொல்லியல் எச்சங்கள் புதைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தும்மக்குண்டில் முதல்பாண்டி என்பவர் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது 2.5 அடி ஆழத்தில் ஒரு முழுமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்செயல் நிகழ்வாக இருந்தாலும் இப்பகுதியில் தொன்மையான பண்பாட்டு அடுக்கை வெளிக்காட்டும் முக்கிய நிகழ்வாக உள்ளது. 2.5 அடி ஆழத்தில் புதைந்துள்ள இத்தாழி உயரம் 3 அடி நடுமையத்தின் விட்டம் 2.5 அடியாக உள்ளது. இந்த அளவுகள் இது ஒரு பெரிய நன்கு வளையப்பட்ட தாழி என்பதையும் ஒரு குறிப்பிட்ட நபரின் நினைவாக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறது.
தாழி களிமண்ணால் செய்யப்பட்டு அதன் மேல் பரப்பு வழுவழுப்பாக மெருகூட்டப்பட்டுள்ளது. கயிறு போன்ற அல்லது கீறல் போன்ற அலங்கார வேலைபாடுகளும் உள்ளன. முதுமக்கள் தாழி என்பது அக்காலத்தில் மக்களின் இறையியல் சமூக படிநிலை, தொழில்நுட்ப அறிவின் ஒரு கலவை. தாழியின் உள்ளடக்கங்கள் இதை மெய்ப்பிக்கின்றன. தாழிக்குள் ஐந்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவிலான மண் சட்டிகள், கலையங்கள் இருந்துள்ளன. இவை ஈமப்பொருட்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இறந்தவர் தனது மரணத்திற்கு பின்னான வாழ்விலும் பயன்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையில் உணவு தானியங்கள் அல்லது நீர் போன்றவற்றை வைத்து புதைத்திருக்கலாம். கருப்பு சிவப்பு மண்பாண்ட தொழில்நுட்பம் தமிழகத்தில் இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்காலத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும். சில கலசங்களில் எலும்புகள் நொறுங்கிய நிலையில் காணப்பட்டிருப்பது இது ஒரு இரண்டாம் நிலை புதைப்பு முறை என்பதற்கான சான்றாக உள்ளது. அதாவது இறந்தவரின் உடலை முதலில் வேறு இடத்தில் வைத்து அது மக்கி தசைகள் பிரிந்த பின் எஞ்சிய எலும்புகளை மட்டும் சேகரித்து அவற்றுடன் ஈமப் பொருட்களையும் சேர்த்து தாழியில் வைத்து புதைப்பது இந்த பழக்கம் பெரும் கற்கால மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆற்றின் கரையோரங்களிலேயே தங்கள் குடியிருப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் இறந்தவர்களை புதைக்கவும் நினைவு சின்னங்களை எழுப்பவும் ஆற்றின் கரைப்பகுதிகளை தவிர்த்து சற்று உயரமான பகுதிகளை தேர்வு செய்தனர். இது வாழ்விடத்தையும் ஈமக்களத்தையும் பிரித்துப் பார்க்கும் ஒரு முதிர்ந்த சமூக பண்பாட்டை காட்டுகிறது. தும்மக்குண்டில் வீடுகள் கட்டும் பணிகள் நடக்கும் மேட்டுப்பகுதியில் தாழிகள் தொடர்ந்து கிடைப்பதாக கூறப்படுவது இந்த பகுதி ஒரு பரந்த ஈம காடாக அக்காலத்தில் விளங்கி இருக்கலாம். எனவே தமிழக அரசு தொல்லியல் துறை இப்பகுதியில் ஒரு மீட்பு அகழாய்வு அல்லது ஒரு மேற்பரப்பு அகழாய்வையாவது மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் சிதறி கிடக்கும் வரலாற்று சங்கிலிகளை இணைத்து தேனி மாவட்டத்தின் பெரும் கற்கால பண்பாட்டை முழுமையாக புரைமைக்க இயலும் என்றார்.

