ADDED : நவ 06, 2025 07:11 AM

பெரியகுளம்: பெரியகுளம் பகுதி சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேக பூஜை நடந்தது.
பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கைலாசநாதருக்கு அன்னாபிஷேகத்துடன், காய்கறி, கனி வகைகளுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள்பங்கேற்று கிரிவலம் சென்றனர்.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஜெயராணி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர், காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் உட்பட பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
கம்பம்: சுருளி அருவியில் ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் நேற்று காலை முதல் நடைபெற்றது. ஆயிரம் கிலோ அரிசியில் சமைத்து சாதத்தை சிவலிங்கத்திற்கு சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் அருவியில் அன்னம் கரைக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோயிலில் நேற்று காலை முதல் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரிசி சாதம், காய்கறிகள் படைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. முல்லைப் பெரியாற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடி: பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். அன்ன தானம் வழங்கப்பட்டன.
பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கயிலாய மேலச்சொக்கநாதர் கோயில், போடி சுப்பிரமணியர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கூடலுார்: நேற்று மாலை சீலைய சிவன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைக்குப் பின் அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். தயிர் சாதம், சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது.

