/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டுத்தோட்ட பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு
/
வீட்டுத்தோட்ட பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : செப் 22, 2025 03:35 AM

வீட்டுத்தோட்டத்தை பராமரிக்கும் பணிகளை தினசரி உடற்பயிற்சியாக மாற்றி, அந்த தோட்டத்தில் கிடைக்கும் மூலிகைகளை தினமும் வீட்டுச் சமையலுக்கு பயன்படுத்துவதுடன், முருங்கை, நிலவேம்பு, தேக்கு மரக்கன்றுகளை வளர்த்து அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் தேனியில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியரின் குடும்பத்தினர்.
வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வீட்டில் வளர்ப்பதும், அதில் இருந்து உணவு தயாரித்து குடும்பத்தினருடன் அமர்ந்து உண்பது ஆரோக்கியமானதாக உள்ளது எனவும், மன அமைதி தருவதாகவும், அருகில் வசிப்பவர்களுக்கு இதன் மூலம் வீட்டுத்தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் தேனி ரத்தினம் நகர் 4வது தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியரான மாலிக்கபூர், அவரது மனைவி ஷகிலா.
அவர்கள் வீட்டில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரம், கறிவேப்பிலை, மாதுளை, நிலவேம்பு, பப்பாளி மரங்களுடன், பல்வேறு கீரை வகைகள், பூச்செடிகள், வெற்றிலை, துளசி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளையும் வளர்த்துள்ளனர்.
செடிகள் பராமரிப்பு பற்றி தம்பதியினர் தினமலர் நாளிதழின் 'மாசில்லா தேனி' பகுதிக்காக கூறியதாவது:
பராமரிப்பு பயிற்சி மாலிக்கபூர், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்: பணிபுரிந்த போது வீட்டில் செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இடத்தில் வீடுகட்டியது போக மீதம் இருந்த இடத்தில் முருங்கை, நிலவேம்பு, தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரித்தேன். மீதமிருந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வந்தோம்.
ஓய்விற்கு பிறகு ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வானேன். அப்போது பல இடங்களுக்கு செல்லும் போது ஆங்காங்கே வரும் செடிகளை கொண்டு வருவேன்.
அவற்றை வீட்டில் உடைந்த பொருட்களில் நட்டு வளர்த்தேன். பப்பாளி, மாதுளை, கறிவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு செடிகளை அவ்வாறு நடவு செய்து பராமரிக்க துவங்கினேன். இதனுடன் கோழிகளும் வளர்த்து வருகிறேன். வீட்டில் ஓய்வு நேரத்தில் செடிகளை பராமரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். மனைவி, பேரக்குழந்தைகளை அழைத்து அவர்களுடன் செடிகள் பராமரிப்பில் ஈடுபடுவேன். செடிகள் புதிதாக தொட்டிகளில் வைக்கும் போது எவ்வாறு நடவு செய்ய வேண்டும்.
பராமரிப்பு பற்றி பேரக்குழந்தைகளுக்கு அவ்வப்போது பயிற்சி அளிப்பேன். விடுமுறை நாட்களில் அவர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது நிறைய சந்தேகங்களை கேட்பர். அதற்கு பதிலளிப்பேன்.
வெளியில் செல்லும் போது புதிதாக மூலிகைச் செடிகள் பார்த்தால் அதனை வாங்கி வந்து வளர்ப்பது எனது வழக்கம். கொரோனா காலத்தில் வீட்டில் வளர்த்த நிலவேம்பு, பப்பாளி இலைகள் கசாயம் வைத்து பயன்படுத்தினோம். இப்போதும் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் கீரைகள், கறிவேப்பிலை அன்றாட சமையலுக்கு பயன்படுகின்றன என்றார்.
வீட்டில் தயாராகும் உரங்கள் ஷகிலா, இல்லத்தரசி, ரத்தினம் நகர்: செடிகள் பராமரிக்க உரங்கள் என கடைகளில் வாங்கி பயன்படுத்துவது கிடையாது. வீட்டில் சமைக்க பயன்படுத்தும் காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடுகள், அரிசி கழுவிய தண்ணீர் இவற்றை உரங்களாக பயன்படுத்துகிறோம். இதனுடன் வீட்டில் வளர்க்கும் கோழி கழிவுகள் உரமாகின்றன. வீட்டுத்தோட்ட பராமரிப்பில் செடிகளை வாடாமல் கவனித்து கொள்வது முக்கிமானதாகும். தண்ணீர் மட்டும் விட்டால் போதாது.
அன்றாடம் செடிகளை கவனிக்க வேண்டும். சில செடிகள் நடவு செய்து சில நாட்கள் மர நிழலில் வைக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. வளர துவங்கிய பின் நேரடியாக வைக்கலாம்.
தொட்டியில் நீர் நிரம்பி இருந்தால் வேர்கள் பாதிப்பு ஏற்படும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். இம்மாதிரியான வீட்டுத்தோட்ட பராமரிப்பு ஆலோசனைகளை இதில் ஆர்வம் உள்ள உறவினர்கள், அருகில் வசிப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது, என்றார்.