ADDED : பிப் 15, 2024 06:14 AM

தேனி: கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று துவங்கியது. தேனி உலக மீட்பர் சர்ச்சில் நடந்த திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.
ஏசுநாதர் உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் இப்பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமான அனுசரிக்கின்றனர்.
முதல் நாளான நேற்று சாம்பல்புதன் அனுசரிக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை வரை சர்ச்களில் வெள்ளிகிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெறும்.
தேனி பங்களா மேடு உலகமீட்பர் சர்ச்சில் தவக்காலம் துவங்கியதை முன்னிட்டு சாம்பல்புதன் திருப்பலி நேற்று காலை நடந்தது. திருப்பலி பாதிரியார் முத்து, உதவி பாதிரியார் மார்டீன், பர்னபாஸ் ஆகியோர் நிறைவேற்றினர்.
திருப்பலியில் ஆதிப்பட்டி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, மணியாரம்பட்டி, பழனிசெட்டிபட்டி, அன்னஞ்சி, இந்திராநகர், ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டு தவக்காலத்தை துவங்கினர்.

