ADDED : ஜூலை 28, 2025 05:21 AM
தேவதானப்பட்டி, : கோழி திருடியவரை கண்டுபிடித்து பெற்றோரிடம் தெரிவித்ததால் ஜாதியை கூறி அவதுாறாக பேசி, கட்டையால் தாக்கி காயப்படுத்திய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெரு அய்யம்மாள். இவர் காமக்காபட்டி தென்னந்தோப்பு காவலாளியாக பணிபுரிந்தார். தோப்பில் கெங்குவார்பட்டி இப்ராஹிம் தெரு ரஹ்மான்கான் 24, வளர்ப்பு கோழிகளை திருடினார். இதனை அய்யம்மாள் மகன் குமார், ரஹ்மான்கானின் தந்தை ரபீக்ராஜா, தாயார் பாத்திமாவிடம் தெரிவித்தார். இதனால் டூவீலரில் சென்ற குமாரின் மைத்துனர் ஜெகதீஸ்வரனை கட்டையால் தாக்கிய ரஹ்மான்கான் ஜாதியை கூறி அவதுாறாக பேசினார்.
இதனை தடுத்த ஜெகதீஸ்வரன் மனைவி சிந்தாமணியும் 26, தாக்குதலுக்கு உள்ளானார். காயமடைந்த இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜெகதீஸ்வரன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ரஹ்மான்கான் உட்பட மூவர் மீது ஜாதியை கூறி அவதுாறாக பேசியதாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.