ADDED : ஜூலை 06, 2025 04:17 AM
தேனி: தேனி மாவட்டத்தில் தேங்காய் வரத்து குறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.70க்கு விற்பனையானது.
மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2024 பிப்., மார்ச் ல் பருவம் தவறி பெய்த மழையை தொடர்ந்து வேர் வாடல் நோய், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்கம் உள்ளிட்ட நோய் தாக்குதலால் தென்னை உற்பத்தி குறைய துவங்கியது. கடந்தாண்டு ஆகஸ்ட் வரை கிலோ அதிகபட்சம் ரூ. 30 வரை விற்பனையாகி வந்தது. ஆனால், அதன் வரத்து குறைந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்தது.தேனியில் கடந்த இருதினங்களாக கிலோ ரூ.70க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லதரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். உணவில் தேங்காய் சேர்ப்பதும் குறைய துவங்கி உள்ளது.
தென்னை விவசாயி கூறுகையில், தேங்காய் விலை உயர்வதற்கு உற்பத்தி குறைவு முக்கிய காரணமாகும். முன்பு மரத்தில் பறிக்கப்படும் போது தேங்காய் ஒரு கிலோ வரை இருக்கும் ஆனால், நோய் பாதிப்பு காரணங்களால் எடை 300 கிராமிற்கும் குறைவாக உள்ளது. அதே நேரம் ஒரு டன் தேங்காய் அறுவடை செய்த இடத்தில் 250 கிலோ முதல் 350 கிலோ வரை மட்டும் அறுவடையாகிறது. விலை உயர்ந்தாலும், விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்றார்.