/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பள்ளத்தாக்கு பன்னீர் திராட்சை விலை... அதிகரிப்பு; மஹாராஷ்டிரா வரத்து முற்றிலும் நிறைவு பெற்றது

ADDED : மே 19, 2025 05:26 AM

கம்பம்: மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை வரத்து முழுமையாக நின்றதால், கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியான பன்னீர் திராட்சை விலை உயர்ந்து வருகிறது. இந்நிலை தொடர வாய்ப்புள்ளதால் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திராட்சை சாகுபடியில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய ரகங்களை சாகுபடி செய்வதில் முதலிடம் பெறுகின்றனர்.
குறிப்பாக மக்கள் விரும்பி சாப்பிடும் விதையில்லா திராட்சை சாகுபடியில், முன்னணியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் நவம்பரில் துவங்கி ஏப்ரல் வரை மஹாராஷ்டிராவில் இருந்து விதையில்லா திராட்சை தமிழக மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும். அந்த காலகட்டங்களில் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது.
அதிகபட்சமாக கிலோ ரூ.30 வரை விற்பனையாகும். ஆனால் இந்தாண்டு மஹாராஷ்டிராவில் சாகுபடியாகும் விதையில்லா திராட்சை மகசூல் பாதிப்படைந்திருப்பதால், தமிழக மார்க்கெட்டிற்கு வரத்து குறைவாக இருந்தது. தற்போது சுத்தமாக வரத்து நின்று விட்டது.
இதனால் கம்பம் பன்னீர் திராட்சை கிலோ 50 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
இந்த விலை இன்னமும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திராட்சை விவசாயிகள் கூறுகையில், ''பன்னீர் திராட்சை ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு 6 டன் கூட தேறவில்லை.
அதே போல மஹாராஷ்டிராவிலும் விதையில்லா திராட்சை மகசூல் பாதிப்படைந்துள்ளது. தற்போது பன்னீர் திராட்சைக்கு விலை கிடைத்து வருகிறது. ஒரளவிற்கு தோட்டங்களில் பழங்களும் உள்ளன'', என மகிழ்ச்சி தெரிவித்தனர்.