கமிஷனர் இன்றி போடி நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
கமிஷனர் இன்றி போடி நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
UPDATED : அக் 22, 2026 07:20 PM
ADDED : அக் 22, 2026 07:16 PM
போடி: போடி நகராட்சியில் பல மாதங்களாக நிரந்தர கமிஷனர் இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழக, கேரளாவை இணைக்கும் வழித் தடத்தில் போடி உள்ளதால் காய்கறி, மளிகை, பள்ளி, கல்லூரியில் சேர்க்க, மருத்துவ வசதி பெற கேரள மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர்.
போடி நகராட்சி கமிஷனர் மாறுதலாகி சென்று பல மாதங்கள் ஆகியும் இது வரை நிரந்தர கமிஷனர் நியமிக்காமல், தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதுபோல தேனி, கம்பம் நகராட்சியில் நிரந்தர பொறியாளர் நியமனம் இல்லாததால் போடி நகராட்சி பொறியாளர் குணசேகரன் கூடுதல பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனால் போடி நகராட்சியில் குடிநீர், சுகாதாரம், வரிவிதிப்பு, பிளான் அப்ரூவல் பெறுதல், மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடத்துவது, வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே போடி நகராட்சிக்கு நிரந்தர கமிஷனரை நியமனம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
