/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் ரூ.2.70 கோடியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தகவல்
/
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் ரூ.2.70 கோடியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தகவல்
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் ரூ.2.70 கோடியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தகவல்
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் ரூ.2.70 கோடியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தகவல்
ADDED : மார் 15, 2024 06:33 AM

தேனி : ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் 2023-2024 ம் ஆண்டில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2.70 கோடி மதிப்பில் ரோடு, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா தெரிவித்தார். அவர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
உங்கள் துறையின் பணி பற்றி
மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஆதிதிராவிடர்கள் பழங்குடியினருக்கு கொண்டு போய் சேர்ப்பது.
துறை சார்பில் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லுாரி விடுதிகள் கண்காணிப்பது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உதவித்தொகை, அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை, பழங்குடியினர் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவையாகும்.
துறையின் பள்ளிகள், விடுதிகள் விபரம்
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் விடுதி 20, மாணவியர் விடுதி 13 , கல்லுாரி மாணவர் விடுதி 2, மாணவியர் விடுதி 3 என 38 உள்ளது.
இது தவிர அகமலை, கொட்டக்குடியில் பழங்குடியினர் உண்டுஉறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இவை அனைத்திலும் சேர்த்து பள்ளி மாணவர்கள் 854, மாணவிகள் 724, கல்லுாரி மாணவர்கள் 102 பேர் மாணவிகள் 153 பேர் என மொத்தம் 1833 தங்கி படிக்கின்றனர் அவர்களுக்கு துறை சார்பில் உணவு, சீருடை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
துறையின் நலத்திட்டஉதவிகள் பற்றி
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள்,பெண்களை சுய தொழில் முனைவோராக்க விலையில்லா தையல் இயந்திரம். புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு துணி தேய்ப்பு பெட்டி, வனப்பகுதி பழங்குடியினர் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்குதல், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கல்வி உதவித் தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது
பள்ளியில் படிக்கும் ஆதிராவிட, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை ஆண்டுக்கு ரூபாய் 500, ஆறாம் வகுப்பில் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. 7, 8 ம் வகுப்பில் ரூ. 1500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் 7,594 மாணவிகளுக்கு ரூ. 4. 39லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் இச் சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் எமிஸ் இணையதளம் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சென்னை ஆதிராவிடர் நல அலுவலகம் மூலம் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகையும் சென்னை அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் படிக்க நிதி உதவி வழங்கப்படுமா
மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 5ம் வகுப்பில் கல்வி தரத்தின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், பராமரிப்பு கட்டணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 43 மாணவர்களுக்கு ரூ11. 79 லட்சம் செலவிடப்படுகிறது.
எத்தனை மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் உள்ள 70அரசு, 15 உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இத்துறை சார்பில் சைக்கிள் வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 1015 மாணவர்கள், 1272 மாணவிகள் என மொத்தம் 2287 பேருக்கு ரூ1.10 கோடி செலவில் சைக்கிள் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் எத்தனை பேருக்கு வழங்கி உள்ளீர்கள்
பெண்களை தொழில்முனைவோராக்க ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்களுக்கு விலையில்லாத சாதாரண தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 80 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர புதிரை வண்ணார் சமூகத்தினர் 126 பேருக்கு ரூ. 8.25 லட்சத்தில் விலையில்லா துணி தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் பற்றி
மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அதே குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி அடிப்படையில் வேலைவாய்ப்பு, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.82 லட்சம், மாநில அரசு ரூ.76.83 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இது தவிர கருணைத்தொகையாக மாநில அரசு ரூ.1.17கோடி என மொத்தம் ரூ.2.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 124 பேருக்கு ரூ.2.65 கோடி தொகை உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு விடுதி சமையலர், தோட்டக்கலை துறையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்ட பணிகள்
ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் துறை சார்பில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. வீரபாண்டி, கோம்பை பேரூராட்சிகளில் மயானத்தில் காத்திருப்பு அறை, எரியூட்டும் கொட்டகை, தாமரைக்குளம் பேரூராட்சி ஆழ்துறை கிணறு, சிமென்ட் ரோடு, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில், பேவர் பிளாக் ரோடுகள், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரத்தில் கழிவுநீர் கால்வாய், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கோட்டூர் ஊராட்சியில் பேவர்பிளாக்ரோடு, கூழையனுார் ரோட்டில் உள்ள மயானத்தில் மேற்கூரை, தரைமட்ட பாலங்கள் என ரூ.2.70 கோடி மதிப்பில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியினர் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறதா
பழங்குயினர் விவசாய நிலங்களுக்கு வன உரிமை பட்டா வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ஆண்டிப்பட்டி நொச்சி ஓடை, உத்தமபாளையம் பளியன்குடி, போடி முதுவாக்குடி, கொட்டக்குடி, சொக்கன்அலை, கரும்பாறை, குறவன்குழி, சுளுத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 பேருக்கு விவசாய நில பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை வன உரிமை பட்டா 115 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

