ADDED : செப் 30, 2026 04:32 AM

தேனி: தேனி பெருந்திட்ட வளாகம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளது. வாகன பதிவு, தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அலுவலகம் வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் வளாகத்தில் இல்லை. தார் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காததால் தற்போது ரோடு இருந்ததற்கான தடயமே இல்லை. ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன. இதனால் டூவீலர்களில் வருபவர்கள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். நேற்று அல்லிநகரத்தை சேர்ந்த கவிதா, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு இருந்த ஜல்லி கற்களால் டூவீலரில் கீழே விழுந்து காயம்பட்டார். இதுபற்றி புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக ரோடு அமைத்து கொடுக்கவில்லை எனவும், பலமுறை கோரிக்கை கடிதம் அனுப்பி பயனில்லை எனவும் போக்குவரத்து அலுவலர்கள் கூறினர்.
