நுாற்றாண்டு விழா பள்ளியில் கேட் சேதம்: முள்வேலி அமைப்பு
நுாற்றாண்டு விழா பள்ளியில் கேட் சேதம்: முள்வேலி அமைப்பு
ADDED : செப் 30, 2026 04:32 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நுழைவு வாயில் கேட் இல்லாததால் முள்வேலி அமைத்துள்ளனர்.
இப் பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. 2017ம் ஆண்டு பள்ளி வளாகத்தில் முகப்பில் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் மற்றும் பள்ளிக்கு பாதுகாப்பு கேட் அமைக்கப்பட்டது.
கேட் சேதமானதால் அதனை அகற்றிவிட்டனர். கடந்த சில மாதங்களாக அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.
பள்ளி நேரம் முடிந்தபின் வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்வதை தடுப்பதற்காக நுழைவு வாயில் முன்பு முட்களை வெட்டி போட்டு வேலி அமைத்துள்ளனர். பள்ளி துவங்கும் நேரம் முடியும் நேரத்தில் மாணவர்கள் செல்வதற்காக முள்வேலியை சற்று ஒதுக்கி விடுகின்றனர்.
நுழைவு வாயில் முன்பு போடப்பட்ட முள்வேலி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது. முள்வேலியை அகற்றி நுழைவு கேட் அமைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
