/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கு நிதி வழங்காததால் ... தவிப்பு: ஒப்பந்ததாரர்களுக்கு பல லட்சம் நிலுவைத் தொகையால் அவதி

ADDED : ஆக 22, 2025 02:40 AM

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பேவர் பிளாக் பதித்தல், வடிகால், சிமென்ட் ரோடு அமைத்தல், அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் முடிந்துள்ளன.
இந்தப் பணிகளுக்கு தேவையான சிமென்ட், மணல், கம்பி, ஜல்லி ஆகியவை ஊராட்சி ஒன்றியங்களில் பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. கடந்த காலங்களில் நடைபெறும் பணிகளுக்கு கட்டுமானத்திற்கு தக்கபடி அதற்கான தொகை விடுவிக்கப்பட்டு வந்தது.
தற்போது பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கட்டுமானத்தில் செலவு செய்த தொகை அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு விடுவிக்கப்படவில்லை.
பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை நிலுவை உள்ளது. நிலுவைத் தொகை கிடைக்காததால் தொடர்ந்து ஒப்பந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பலரும் திணறுகின்றனர்.
பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் நூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு பணிகளை முடித்துள்ளனர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது. பெயரளவில் அவ்வப்போது மிக குறைவான தொகையை விடுவிக்கின்றனர்.
அரசு மூலம் வரவேண்டிய தொகை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் அன்றாடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணம் வரவு வைக்கப்படுகிறதா என்று பார்த்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் பலருக்கும் பல லட்சம் ரூபாய் முடங்கியுள்ளதால் அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணற வேண்டி உள்ளது என தெரிவித்தனர்.