/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்திற்கு சிரமப்படும் விவசாயிகள், பொதுமக்கள்
/
போக்குவரத்திற்கு சிரமப்படும் விவசாயிகள், பொதுமக்கள்
போக்குவரத்திற்கு சிரமப்படும் விவசாயிகள், பொதுமக்கள்
போக்குவரத்திற்கு சிரமப்படும் விவசாயிகள், பொதுமக்கள்
ADDED : ஏப் 28, 2024 04:19 AM

போடி : போடி அருகே காரிப்பட்டி, ராசிமலை மலைக் கிராமங்களுக்கு ரோடு அமைத்திட விவசாயிகள் நிலங்கள் தானம் செய்த நிலையிலும், அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 8 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடங்கி உள்ளன.
இதனால் விளை பொருட்களை கொண்டு வரவும், நோயாளிகள் மருத்துவ வசதி பெற முடியாமல் டோலி மூலம் கட்டி தூக்கி வரும் நிலையில் விவசாயிகள், பொது மக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.
போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சி குரங்கணி செல்லும் ரோட்டில் இருந்து 5.46 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது காரிப்பட்டி, ராசிமலை கிராமம். 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். 1500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. காபி, ஏலம், மிளகு, எலுமிச்சை, இலவம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்களைக் கொண்டு செல்லவும், விளையும் விளை பொருட்களை போடிக்கு கொண்டு வரவும் ரோடு வசதி இன்றி பாறை கற்களாகவும், குண்டும், குழியுமாக உள்ளது.
இங்கு உள்ளவர்களுக்கு காய்ச்சல் உட்பட உடல் உபாதைகள் ஏற்பட்டால், மருத்துவ வசதி பெற 'டோலி' கட்டி கைச்சுமையாக தூக்கி வர வேண்டி உள்ளது. சில நேரங்களில் உயிர் பலியாகும் நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க கொம்புதூக்கி - காரிப்பட்டி மலைக் கிராமத்திற்கு விவசாயிகள் நிலங்கள் தானம் கொடுத்தும், அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகியும் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் முடங்கி உள்ளன.
விவசாயிகள் கூறியதாவது:
எட்டு ஆண்டுகளாக முடங்கிய பணிகள்:
ஜெ.பாண்டியன், விவசாயி, காரிப்பட்டி: கொம்பு தூக்கி மெயின் ரோட்டில் இருந்து காரிப்பட்டி வரை ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக இருந்தது. ஜீப் செல்லும் அளவிற்கு 8 ஆண்டுகளுக்கு முன் ரோடு அமைக்க பாதை அமைக்கப்பட்டது. அப்போது பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பாறை கற்களாகவும், குண்டும், குழியுமாக மாறி உள்ளன.
ரோடு அமைக்க விவசாயிகள் தங்களது நிலங்களை அரசுக்கு தானமாக வழங்கினர். காப்புக்காடு ரோடு அமைய உள்ள பாதையில் இருக்கும் மரங்களை வெட்ட வனத்துறை குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்தது. விவசாயிகள் பங்களிப்பு தொகையாக குறிப்பிட்ட தொகையை செலுத்தினோம். உரிய காலத்தில் வனத்துறை மரம் வெட்ட அனுமதி வழங்கவில்லை. தற்போது அந்த தொகை என்ன ஆனது என்று தெரியவில்லை. பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 5.46 கி.மீ., தூரம் ரோடு அமைப்பதற்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் துவங்கப்படாமல் முடங்கியுள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
தானமாக வழங்கப்பட்ட நிலம்
ஆர்.பாண்டியன், விவசாயி, ராசிமலை : மண் சரிவு ஏற்படாமல் இருக்க கொம்புதூக்கி - காரிப்பட்டி வரை உள்ள 9 வளைவுகளில் சிமென்ட் ரோடு அமைப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நான்கு இடங்களில் மட்டுமே சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டு, மீதம் உள்ள வளைவுகளில் ரோடு அமைக்கும் பணிகள் முடங்கி உள்ளன. ரோடு வசதியின்றி விளைந்த விளை பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டுவர முடியாத நிலையில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ரோடு அமைப்பதற்காக விவசாயிகள் தங்களது நிலங்களை தானமாக கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் வனத்துறை முட்டுகட்டையால் ரோடு அமைக்காமல் முடங்கியுள்ளன. விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
டோலி கட்டி துாக்கிவரும் அவலம்
ஜெ.லட்சுமணன், விவசாயி, ராசிமலை: காரிப்பட்டி, ராசி மலைக்கு ரோடு வசதி இன்றி தினமும் கூலி தொழிலாளர்கள் சென்று வர முடியாமல் சிரமம் என்பதால், அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். மொத்தமாக ஆட்களை ஜீப்பில் அழைத்து செல்வதற்கு குறைந்த கட்டணமாக ரூ.2500 வரை செலவாகும். இங்கு உள்ளவர்களுக்கு திடீரென நோய் வாய் பட்டால், பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் மருத்துவ வசதி பெற டோலி கட்டி தூக்கி வர வேண்டிய நிலையில் சிரமம் அடைந்து வருகின்றோம்.
பாதையில் மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் நோயாளிகளை தூக்கி வர முடியாத நிலையில் உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. அவசரத்திற்கு தொடர்பு கொள்ள அலைபேசி டவர் வசதி இல்லாத நிலையில் மலைக் கிராம மக்கள் தவிப்பு அடைந்து வருகின்றனர். மின் வசதி இல்லாமல் இரவு நேரங்களில் காட்டு மாடுகளுக்கு பயந்து வாழ வேண்டிய நிலையில் சிரமம் அடைந்து வருகின்றோம், என்றார்.

