/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் குறையும் நீர்மட்டம் பரிதவிப்பில் விவசாயிகள்

ADDED : செப் 22, 2024 01:56 AM
கூடலுார்:முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் 130 அடியாக குறைந்தது. நீர்திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் நீர்வரத்து குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 348 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த 900 கன அடிநீர் சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 1555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கூடுதல் நீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 130 அடியானது(மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4720 மில்லியன் கன அடியாகும்.
அணையின் நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது முதல் போக நெல் சாகுபடியில் பல இடங்களில் அறுவடை செய்ய தயாராகவும், சில இடங்களில் நெற்கதிர்களுடன் விளைந்துள்ளன. அதனால் தற்போது தண்ணீரின் தேவை மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் 1555 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீர் திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.