/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் நான்கு நாட்களாக நிற்கும் லாரிகள் குமுளியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
/
வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் நான்கு நாட்களாக நிற்கும் லாரிகள் குமுளியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் நான்கு நாட்களாக நிற்கும் லாரிகள் குமுளியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் நான்கு நாட்களாக நிற்கும் லாரிகள் குமுளியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
ADDED : டிச 07, 2024 11:56 PM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணைக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் கேரள வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் 4 நாட்களாக நிற்கிறது. இன்று (டிச.8) மாலைக்குள் அனுமதிக்காவிட்டால் குமுளியை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக டிச.4ல் தமிழக நீர்வளத்துறையினர் இரண்டு லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை கொண்டு சென்றனர்.
வள்ளக்கடவு சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர்கேம்பில் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. போராட்டம் செய்த விவசாயிகளை கலைத்து விடுவதிலேயே போலீசார் தீவிரமாக இருந்தனர். 4 நாட்களாக லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் வள்ளக்கடவில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இப் பிரச்னை குறித்து பேசுவதற்காக தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் கலெக்டர் இல்லாததால் திரும்பினர்.
விவசாயிகள் கூறும் போது: வழக்கமாக அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஓரிரு நாட்களில் இதற்கான தீர்வைக் கண்டு அனுமதித்திருக்க வேண்டும்.
ஆனால் தேனி மாவட்ட நிர்வாகம் இதன் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக நேற்று நீர்வளத்துறை அதிகாரிகள் கலெக்டரை சந்திக்க சென்ற நிலையில் சந்திக்க முடியாமல் திரும்பி வந்தது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலைக்குள் லாரிகளை அணைக்கு அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியை முற்றுகையிடுவோம் என்றனர்.