ADDED : செப் 19, 2026 07:23 PM
மூணாறு, செப்.20-
மூணாறு பகுதியில் காட்டு யானைகள் அச்சத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
மூணாறு வனப் பிரிவில் படையப்பா, விரிந்த கொம்பன், ஒற்றை கொம்பன் உள்பட 19 காட்டு யானைகள் உள்ளதாக வனத்துறையினர் கணக்கில் தெரியவந்தது. அவை எஸ்டேட் பகுதிகளில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அதேபோல் தேவிகுளம் வனப்பிரிவில் வனத்துறை கணக்கு படி 17 காட்டு யானைகள் உள்ளன. அவை உயிர் சேதங்கள் உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இறுதியாக சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டி அய்யப்பன்பாறை பகுதியில் செப்.17 இரவில் காட்டு யானை தாக்கி ஏலத்தோட்ட தொழிலாளி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் 30, இறந்தார்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அச்சம் அடைந்து வருகின்றனர். அதேசமயம் காட்டு யானைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மூணாறு பகுதியில் நடமாடும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானையை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. தவிர காட்டு யானைகளை எங்கு பார்த்தலும் ரசித்து விட்டு செல்வர். மாட்டுபட்டியில் பசுமையான புல்மேட்டில் யானைகள் தீவனத்திற்காக நாள் கணக்கில் முகாமிடும். அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்தும், போட்டோ எடுத்தும் மகிழ்வார்கள்.
