ADDED : செப் 20, 2024 06:33 AM

தேனி: தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னத்தேவன்பட்டி ஜோதியம்மாள், அல்லிநகரம் உதயகுமார். கணவன், மனைவியான இருவரும் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.
மகள் ஜெயஸ்ரீ 15, கூலிவேலை செய்யும் தாய் ஜோதியம்மாளுடன் வசிக்கிறார். செப். 13ல் அதேப்பகுதியை சேர்ந்த ஆசாரம், மீனா, செல்வராணி, முருகேஸ்வரி ஆகியோர் ஜோதியம்மாள் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஜோதியம்மாள் அரிவாளை எடுத்து முருகேஸ்வரியை வெட்டினார். அல்லிநகரம் போலீசார் முருகேஸ்வரியின் உறவினர் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக செப். 15ல் வீட்டின் முன் நின்ற ஜோதியம்மாள், அவரது மகள் ஜெயஸ்ரீ ஆகிய இருவரை முருகேஸ்வரியின் உறவினர்கள் காசிமாயன், ராஜபாண்டி, சிவசாமி, சவுந்திரபாண்டி, சிவராஜா, பிரேம்குமார் ஆகிய ஆறு பேர் ரீப்பர் கட்டைகளால் தாக்கினர்.
இதில் ஜோதியம்மாள் சம்பவ இடத்தில் இறந்தார்.
ஜெயஸ்ரீ தேனி மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளார்.
இறந்த ஜோதியம்மாள் தம்பி சின்னச்சாமி புகாரில் அல்லிநகரம் போலீசார் ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து காசிமாயன், சிவராஜா, பிரேம்குமார், ராமர் உள்ளிட்ட நால்வரை செப்., 16ல் கைது செய்தனர்.
நேற்று பின்னத்தேவன்பட்டி பள்ளிக்கூடத் தெரு சிவசாமி 32, சவுந்திரபாண்டி 39 ஆகிய இருவரை கைது செய்தனர்.