/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளால் சேதம் வனத்துறை எச்சரிக்கை
/
காட்டு யானைகளால் சேதம் வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஏப் 05, 2025 05:26 AM

மூணாறு: மூணாறு பகுதியில் படையப்பா உள்பட காட்டு யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தின.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் பகலில் கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. இரவில் நியூ டிவிஷன் பகுதிக்கு யானை சென்றது. அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 36, சவாரி முடிந்து தனது ஆட்டோவில் வீட்டை நோக்கி இரவு 8:45 மணிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் படையப்பா முன் ஆட்டோவுடன் சிக்கினார். ஆட்டோவை சேதப்படுத்திய யானை, அதனை தேயிலை தோட்டத்தினுள் தூக்கி வீசியது. காயங்கள் எதுவும் இன்றி கருப்பசாமி உயிர் தப்பினார். அதன்பின் அதிகாலை மூணாறு நகர் பகுதிக்கு வந்த படையப்பா தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் அருகில் உள்ள பாண்டியராஜின் கடையை சேதப்படுத்தியது.
சேதம்: மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஏழு யானைகளைக் கொண்ட கும்பல் தொழிலாளர்களின் காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியதுடன் பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் நடமாடின.
அதேபோல் கல்லார் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒற்றை தந்தங்களை கொண்ட இரண்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் வலம் வந்தன.
நயமக்காடு, கல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் நடமாடிய யானைகளை ஆவேசமடை செய்யும் வகையில் சிலர் துன்புறுத்தியதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூசோமன் எச்சரித்துள்ளார்.