/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டோலிக்கு அதிக கட்டணம் வசூலித்த நால்வர் கைது
/
டோலிக்கு அதிக கட்டணம் வசூலித்த நால்வர் கைது
ADDED : டிச 02, 2024 04:29 AM
சபரிமலை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் வயது முதிர்ந்த மற்றும் நடக்க முடியாத பக்தர்களுக்கு டோலி வசதி உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல, 3,250 ரூபாய் கட்டணம். சன்னிதானத்தில் தரிசனம் முடித்து திரும்ப பம்பை வர வேண்டுமெனில், 6,500 ரூபாய் கட்டணம் என, தேவசம் போர்டு நிர்ணயித்துள்ளது.
ஆனால், டோலி துாக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் அதிக பணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. பம்பையில் இருந்து நேற்று முன்தினம் ஒரு பக்தரை சுமந்து வந்த டோலி தொழிலாளர்கள், தேவசம்போர்டு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் கேட்டுள்ளனர். அந்த பக்தர் தர மறுத்ததால், நீலிமலை ஏற்றத்தில் அவரை இறக்கி விட்டனர். அந்த பக்தர் போலீசாரிடம் விபரத்தை கூறினார்.
இதையடுத்து, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செங்கரையை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளிகளான செல்வம், 56, விபின், 37, செந்தில்குமார், 37, பிரசாத், 33, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டோலி சுமப்பதற்காக தேவசம் போர்டு வழங்கியிருந்த அடையாள அட்டையை ரத்து செய்யவும் போலீசார் தேவசம்போர்டுக்கு பரிந்துரைத்தனர்.

