/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளியை கொன்ற யானையை கண்காணிக்கும் காவலர்கள்
/
தொழிலாளியை கொன்ற யானையை கண்காணிக்கும் காவலர்கள்
ADDED : மார் 04, 2024 06:03 AM
மூணாறு: மூணாறு அருகே தோட்டத் தொழிலாளியை கொன்றது படையப்பா இல்லை எனவும், கொலை கொம்பனை வனத்துறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பிப்.26 இரவில் ஆண் காட்டு யானை தாக்கி, அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ்குமார் 45, இறந்தார். அவரது ஆட்டோவையும் சின்னாபின்னமாக்கியது. இச்சம்பவம் எஸ்டேட் பகுதிகளில் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை சுரேஷ்குமாரை கொன்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அதனை வனத்துறையினர் மறுத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுரேஷ்குமாரை கொன்றது படையப்பா அல்ல. அவரை கொன்ற யானையின் தந்தங்கள் படையப்பாவின் தந்தங்களை போன்று காணப்படும் என்ற போதும் அதன் தலை சற்று பெரிதாக காணப்படும். அந்த யானை சுரேஷ்குமாரை கொன்ற பின் மறுநாள் குண்டுமலை எஸ்டேட் பகுதியில் நடமாடியது. அதன் பிறகு காணவில்லை. அதனை கண்காணிக்க இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.', என்றனர்.

