/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனமழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
/
கனமழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 07:05 AM

கடமலைக்குண்டு: மேற்கு தொடர்ச்சிமலை வருஷநாடு மலைப்பகுதியில் அடுத்தடுத்து பெய்து வரும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணைக்கு வருஷநாடு மூல வைகை ஆற்று நீர் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக வருஷநாடு மலைப்பகுதியில் அடுத்தடுத்து பெய்து வரும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீர் பல சிற்றாறுகளாக ஒன்று சேர்ந்து மூல வைகை ஆறாகி வாலிப்பாறை முறுக்கோடை, தும்மக்குண்டு, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைசாமிபுரம் கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணை சென்றடைகிறது. வருஷநாடு முதல் கண்டனூர் வரை மூல வைகை ஆற்றில் மணல் பாங்கான பகுதியாக இருப்பதால் மூல வைகை ஆற்று நீர் வைகை அணை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. மூல வைகை ஆற்று நீர் அக்டோபர் 22ல் வினாடிக்கு 338 கன அடி வீதம் வைகை அணை சென்று சேர்ந்தது.
மலைப்பகுதியில் தொடரும் மழையால் மூல வைகை ஆற்றில் தற்போது நீர் வரத்து உயர்ந்து வைகை அணைக்கு சேரும் நீரின் அளவு வினாடிக்கு 530 கனஅடியாக உள்ளது. மூல வைகை ஆற்று நீரால் வைகை அணை நீர்மட்டம் விரைந்து உயர்கிறது. அக்டோபர் 22ல் 57.91 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம்
நேற்று 59.12 அடியாக உயர்ந்துள்ளது. அணை உயரம் 71 அடி. அணைக்கான மொத்த நீர் வரத்து வினாடிக்கு 2150 கன அடி.
அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன
அடி வீதம் வெளியேறுகிறது.