/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வன விலங்குகளை கட்டுப்படுத்த உயர் மட்டக்குழு முடிவு
/
வன விலங்குகளை கட்டுப்படுத்த உயர் மட்டக்குழு முடிவு
வன விலங்குகளை கட்டுப்படுத்த உயர் மட்டக்குழு முடிவு
வன விலங்குகளை கட்டுப்படுத்த உயர் மட்டக்குழு முடிவு
ADDED : மார் 01, 2024 12:25 AM

மூணாறு: வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்துவது என வனத்துறை உயர்மட்ட குழு முடிவு செய்தது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பிப்.26 இரவில் காட்டு யானை தாக்கி, அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ்குமார் 45, இறந்தார். அவருடைய ஆட்டோவையும் சின்னாபின்னமாக்கியது.
ஆய்வு: சம்பவ இடத்தையும், ஆட்டோவையும் ஹைரேஞ்ச் சர்க்கிள் சி.சி.எப். அருண் தலைமையில் வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சி.சி.எப்., தலைமையில் வனத்துறை உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் திருவனந்தபுரத்தில் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்த முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்: காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை தடுப்பு பிரிவு சிறப்பு படையினரை அமைத்து அவற்றின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். 'ட்ரோன்' கள் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
அவற்றின் நடமாட்டத்தை அலைபேசிகளில் தகவல் அளிப்பதை விரிவுபடுத்த வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
அந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக மூன்று கட்டங்களில் நடைமுறை படுத்தப்படும். வனவிலங்குகளால் இனி உயிர் சேதம் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என சி.சி.எப். அருண் தெரிவித்தார்.

