/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி; தோட்டக்கலைத் துறையினர் விளக்கம்

ADDED : நவ 04, 2024 06:23 AM
தேனி: தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகளால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இந்த வண்டுகளை கட்டுப்படுத்தி, மகசூலை பெருக்குவது பற்றி தோட்டக்கலைத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மாவட்டத்தில் 23,500 எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடியாகிறது. தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டு 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பின் காய்க்க துவங்குகின்றன. காய்க்க துவங்கிய 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை நடக்கிறது.
தென்னை மரங்களில் குருத்துப் பகுதியை காண்டாமிருக வண்டுகள் தாக்குவதால் அவற்றில் மகசூல் பாதிக்கப்படுகிறது.
இந்த வண்டுகளை கட்டுப்படுத்துவது பற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது:
எருக்குழியில் காணப்படும் புழுக்கள், கூட்டுப் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். நடுக்குறுத்தை சுற்றி உள்ள மட்டைகளில் 3 அந்துருண்டைகளை இடுக்குகளில் வைக்க வேண்டும் அல்லது வேப்பங்கொட்டை துாள் 150 கிராம், காய்ந்த மணல் 300 கிராம் கலந்து நடுக்குருத்து பகுதியில் துாவலாம்.
எருக்குழியில் வளரும் புழுக்களை அழிக்க மழை காலத்தில் பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சானத்தை ஊற்றலாம். கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு ஒன்று வீதம் வைத்து, அழிக்கலாம்.
பொறிகளை மரம், ஓலைகளில் கட்டக்கூடாது. இப்பொறிகளில் விழும் வண்டுகளை கண்காணித்து அழித்து விட வேண்டும். ஆமணக்கு புண்ணாக்கு ஒரு கிலோவை ஒரு லிட்டர் நீருடன் கலந்து ஏக்கருக்கு 30 பானைகளை வைத்து அழிக்கலாம்.
குருத்துப் பகுதியில் வண்டுகள் சேதப்படுத்தி இருந்தால் துளைகளில் உள்ள வண்டுகளை வெளியே எடுத்து அழிக்க வேண்டும். விளக்கு பொறிகளையும் பயன்படுத்தலாம். இறந்த மரங்களை எரித்து விட வேண்டும். இவ்வழிமுறைகளை பின்பற்றி காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலை குறைக்கலாம்., என்றார்.